முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரகிரகணம்: திருப்பதி - பழனி கோவில்களில் நடை அடைப்பு

செவ்வாய்க்கிழமை, 7 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, அக்.08 - சந்திரகிரகணத்தை முன்னிட்டு இன்று , திருப்பதி, பழநி மலைக்கோயில்கள் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று 8ஆம் தேதி, மாலை 4:45 மணி முதல், இரவு 7:05 மணி வரை, சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருமலை ஏழுமலையான் தரிசனம், இன்று , 10 மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளது.

சந்திரகிரகணம் துவங்குவதற்கு, 6 மணிநேரம் முன், திருமலை, ஏழுமலையான் கோவில் நடையை சாத்துவது வழக்கம். அதனால், புதன்கிழமை காலை, 10:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, ஏழுமலையான் கோவில் மூடப்படும்.

இன்று காலை, 6:30 மணி முதல், 9:30 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். சந்திர கிரகணம் முடிந்த பின், இரவு 8:00 மணிக்கு, கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்து, பூஜைகள் நடத்தப்படும். அதன்பின், இரவு 10:30 மணி முதல் நள்ளிரவு வரை, பக்தர்கள் தர்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

இன்றைய தினம் , வி.ஐ.பி., பிரேக் தரிசனம், ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமக்கள் தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், 50 ரூபாய் சுதர்சன தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சந்திரகிரகணத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயில் ஞானதண்டாயுதபாணி சுவாமி சன்னதி வழக்கம் போல் இன்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். விஸ்வரூப தரிசன பூஜை நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜைக்கு பின் மாலை 5.30 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜை பகல் 1.30 மணியளவில் நடத்தப்படும்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 2 மணிக்கு நடைசாத்தப்பட்டு, அதன்பின் மாலை 6 மணிக்குமேல் கோயில் சுத்தம் செய்யப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என பழநி கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

திரு ஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இன்று பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும்.பின்னர் பிற்பகல் 2 மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 6.05 மணிக்கு சம்ரோட்சண பூஜைக்குப்பின் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என பழனி கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முழுமையான சந்திரகிரகணம் உண்டாவதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்களைப் பற்றி பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இன்று கேது கிரஸ்தமாக ரேவதி நட்சத்திரத்தில் உருவாகும் இந்த கிரகணம் பகல் 2.45 மணி தொடங்கி மாலை 6.04க்கு முடிகிறது. அசுவினி, ஆயில்யம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், புதன்கிழமையில் பிறந்தவர்களும் கிரகண சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்