முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்கள்யான் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி

புதன்கிழமை, 15 அக்டோபர் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

மதுரை, அக் 16 - மங்கள்யான் விண்கலம் முதல் முயற்சியிலேயே வெற்றியை பெற்றிருப்பதற்கு விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியே காரணம் என்று மங்கள்யான் குழுவில் இடம் பெற்ற விஞ்ஞானிகள் ஜெயசந்திரன், பால்பாண்டியன் ஆகியோர் தெரிவித்தனர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஓர் அங்கமான ஷார்ப் அமைப்பு சார்பில் மங்கள்யான் திட்டத்தில் பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளான ஜெயசந்திரன், பால்பாண்டி ஆகியோருக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசன் தலைவர் ரத்தினவேலு ஆகியோர் வரவேற்று பேசினர். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் முதன்மை பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவசுப்பிரமணியன் அறிமுகவுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மங்கள்யான் துணை திட்ட இயக்குனர் ஜெயசந்திரன் பேசுகையில், மங்கள்யான் விண்கலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. திறன் மேம்படுத்தப்பட்ட உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. விஞ்ஞானிகள் குழு திட்டமிட்டபடி மங்கள்யான் செயல்பட்டு வருகிறது. 6 மாதங்கள் செயல்பாட்டில் இருக்கும் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இப்போதைய சூழலில் மேலும் 6 மாதங்களுக்கு இருக்கும் வகையின் அதன் செயல்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இளம் தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் நாட்டுக்கு நேரடியாக சேவை செய்ய கூடிய இத்தகைய ஆராய்ச்சிகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றார்.

திருவனந்தபுரம் இஸ்ரோ மைய விஞ்ஞானி பால்பாண்டியன் பேசுகையில்,

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்துக்கு முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்துள்ளது. இது வேறெந்த நாட்டுக்கும் கிடைக்காத பெருமையும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியும் ஆகும். மங்கள்யான் விண்கலம் ஏவப்பட்ட பிறகு உலக அரங்கில் இந்தியா மீதான மதிப்பு கூடியிருக்கிறது. குறைவான எடையை தாங்க கூடிய சக்தியுள்ள ராக்கெட் மூலம் இத்தகைய வெற்றியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஒவ்வோர் அம்சமும் துல்லியமாக இடம் பெற வேண்டும் என்பதில் விஞ்ஞானிகள் குழு கவனத்துடன் செயலாற்றியது. இதுவே முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்ததற்கு காரணம் என்றார். ஷார்ப் தலைவர் சுபா பிரபாகரன் நன்றி கூறினார்.

முன்னதாக விஞ்ஞானிகள் பால்பாண்டியன், ஜெயசந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் சந்திராயனை தொடர்ந்து மங்கள்யான் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்ததாக சந்திராயன் 2 விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சந்திரனில் இறங்க கூடிய வகையில் இந்த விண்கலம் அமையும். அதே போல் சூரியனை பற்றிய ஆய்வுக்காக ஆதித்யா என்ற திட்டமும் இருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதை பற்றிய ஆய்வுக்கு மங்கள்யான் விண்கலம் உதவிகரமாக இருக்கும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்