முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.20 - தமிழகத்தில் துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் இது தொடர்பாக மேற்கொண்டு வருகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலை குறித்து வருவாய் நிருவாக ஆணையர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில், மாநில நிவாரண ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர், வருவாய்த் துறை அரசுச் செயலர், ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் (பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிப்பு) ஆர். லில்லி, சென்னை மாவட்ட ஆட்சியர் எ, சுந்தரவல்லி, ஆகியோர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வருவாய்த் துறை அமைச்சர் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மேலும், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை கண்காணித்து உரிய அறிவுரை வழங்கினார். தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவசரக் கூட்டம் நடத்தினார்.

இந்த ஆய்வின் போது, மாநில நிவாரண ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொண்டு வருகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்கள். மேலும், நடப்பாண்டில் இதுவரை, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய இயல்பான மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது எனவும், தற்போதைய நிலையில், வருவாய்த் துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் எடுத்துரைத்தார்.

வட கிழக்கு பருவமழை பாதிப்புகள் தொடர்பாக, பொதுமக்கள் தங்களின் புகார்களை, மாநில அளவில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1070-லும், மாவட்ட அளவில், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள தொலைபேசி எண்.1077-லும் தெரிவித்தவுடன் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கெள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட தொலைபேசி எண்களில் பொது மக்கள் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

பருவ மழையினால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்