முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பண விவகாரம்: பிரதமருக்கு ஹசாரே எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 20 - வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணத்தை ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மீட்போம் என்று பாஜக தேர்தல் வாக்குறுதியாக கூறியிருந்தது. கருப்பு பணம் மீட்கப்பட்டால் ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா ரூ. 15 லட்சம் கிடைக்கும் என்று மோடி கூறியிருந்தார். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்த நிலையில் பாஜக கருப்பு பண விஷயத்தில் மவுனமாக உள்ளது. இது பற்றி காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியதும் மத்திய அரசு வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைத்து இருப்பவர்களின் பெயர்களை வெளியிட இயலாது என்று அறிவித்தது. இது பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு பணத்தை மீட்கும் விஷயத்தில் பாஜக திடீர் பல்டியடித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் இதை கண்டித்து நாடெங்கும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இது தொடர்பாக புதிய விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் 1995ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு ஜெர்மனி நாட்டுடன் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்படும் என்று ஒரு பிரிவு உள்ளது. எனவேதான் கருப்பு பணம் குறித்த தகவல்களை மத்திய அரசால் தற்போது வெளியிட இயலவில்லை என்றார். இதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில் பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

வெளிநாட்டு வங்கிகளில் இந்திய கோடீஸ்வரர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு தாயகம் கொண்டு வர வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். தற்போது நமது நாட்டு முன்புள்ள முக்கிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகும். எனவே கருப்பு பணம் மீட்கப்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தலின் போது கருப்பு பணம் மீட்கப்படும் என்று நீங்கள் வாக்குறுதி கொடுத்து இருந்தீர்கள். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில்அளித்துள்ள கருத்து மிகவும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இதில் நீங்கள் விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி நடத்துவேன். உயிர் துறக்க தயார். கடந்த 35 ஆண்டுகளில் நான் எத்தனையோ போராட்டங்களை நடத்தி விட்டேன். ஆனால் எந்த கட்சிக்கும் எதிராகவோ, அல்லது தனி நபர் யாருக்கும் எதிராகவோ நான் ஒருபோதும் போராட்டம் நடத்தியது இல்லை. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும்தான் போராட்டம் நடத்தி உள்ளேன். ஆட்சி அதிகாரத்தில் உங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது. ஆனால் நான் பிச்சைக்காரன். எனக்கு எந்த செல்வமும் கிடையாது. இந்த நாட்டுக்காக வாழ்கிறேன். இந்த நாட்டுக்காக உயிர் துறக்கவும் தயாராக உள்ளேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்