முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பவார் கட்சி ஆதரவு!

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

மகாஷ்டிராவில் திடீர் திருப்பமாக, பாஜக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு தருவதற்கு தயாராக இருப்பதாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதையடுத்து, தேசியவாத கட்சியின் ஆதரவு எத்தகையது என்பது பற்றி விரிவாக புரிந்துகொண்ட பிறகே அதுகுறித்து பேசப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

அதேவேளையில், பாஜகவுக்கே முதல்வர் பதவி என்று அக்கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று தான் நம்புவதாக, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். சிவசேனா ஆதரவுடன் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமையும் என்று விரும்புகிறார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, "மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சிவசேனா உடனான 25 ஆண்டு கால கூட்டணி உறவு முறிந்திருக்கக் கூடாது. ஆனால், தேர்தல் முடிவுகளால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

சிவசேனா உடனான பழைய உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று நம்புகிறேன். தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார் அத்வானி.

மகாராஷ்டிராவில் சிவசேனா துணையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், மகாராஷ்டிராவில் சுமார் 115 இடங்களுடன் தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கவுள்ளது.

இதனால், தேர்தலுக்கு முன்பு கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனாவின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் நிலையில் பாஜக இருக்கிறது.

இந்தச் சூழலில், மகாராஷ்டிர வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு தர தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபைத் தொகுதிகளுக்கும், ஹரியாணாவில் உள்ள 90 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கடந்த 15-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இத்தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 63 சதவீதமும், ஹரியாணாவில் 76.54 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நேற்று பிற்பகலக்குள் பெரும்பான்மையான தொகுதிகளில் முடிவு அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்