முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் திருத்தியமைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.20 - தமிழகத்தில் முதல் 1.8 கி.மீ.க்கு ரூ.25-ம், கூடுதலாக வரும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.12 என புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. புதிய கட்டண விகிதப்படி ஆட்டோ மீட்டரில் மாற்றம் செய்ய 45 நாள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு 2013-ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை சென்னை மாநகரில் மட்டும் அமலில் உள்ளது. பிற மாவட்டங்களில் மீட்டர் கட்டண முறை அமலில் இல்லை. ஆனால், பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் இருப்பதில்லை. மீட்டர் இருந்தால் இயங்குவதில்லை. இதனால் ஆட்டோக்களில் இஷ்டம்போல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

சென்னையில் இருப்பதுபோல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஆட்டோ மீட்டர் கட்டண முறையை அமல்படுத்தக் கோரி தமிழக அரசுக்கு நுகர்வோர் சங்கங்கள் சார்பில் மனுக்கள் அனுப்பப்பட்டன. கோவை நுகர்வோர் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை திருத்தியமைத்து தமிழக அரசின் உள்துறை அக்.16-ல் அரசாணை (எண் 772) வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கு ரூ.25-ம், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ. தூரத்துக்கும் ரூ.12-ம், காத்திருப்பு நேரத்தில் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ரூ.3.50, இரவு கட்டணமாக (இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை), பகல் நேர கட்டணத்தைவிட கூடுதலாக 50 சதவீத கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட ஆட்டோ கட்டணம் அக்.16 முதல் அமலுக்கு வந்துள்ளது. இப்புதிய கட்டண விகிதப்படி ஆட்டோக்களில் மீட்டரில் மாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோக்களில் உள்ள பழைய கட்டண மீட்டர்களை எடுத்துவிட்டு, புதிய மின்னணு மீட்டர்களைப் பொருத்தவும், புதிய மீட்டரில் புதிய கட்டணத்தை பதிவேற்றம் செய்து 45 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காண்பித்து முத்திரையிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்