முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்புப்பண விவகாரம்: ஜெட்லி மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.20 - வெளிநாடுகளில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவது குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாட்டுக்கு தவறான தகவல் அளித்துள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 150 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்ற வாக்குறுதி அளித்த பாஜக இப்போது முற்றிலும் பல்டி அடிக்கிறது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட 1995-ம் ஆண்டு இந்தியாவும் ஜெர்மனியும் கையெழுத்திட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் தடுக்கிறது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பதை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்கள் லீச்டென்ஸ்டைன் நாட்டிலுள்ள வங்கிகள் மற்றும் சுவிட்சர்லாந் திலுள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி ஆகியவற்றில் இருந்து கிடைத்துள்ளன.

ஜெர்மனி அரசு அளித்த லீச்டென்ஸ்டைன் நாட்டிலுள்ள வங்கிகள் தொடர்பான தகவல்களை வெளியிட மேற்கூறிய ஒப்பந்தம் தடுக்கிறது என்ற முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஜூலை 4, 2011-ல் அளித்த தீர்ப்பில் நிராகரித்துள்ளது.

இந்தத் தகவல்களை வெளியிட ஜெர்மனி ஆட்சேபம் தெரிவித்துள்ளது என்று ஜேட்லி கூறியுள்ள தகவலும் தவறானது. லீச்டென்ஸ்டைன் நாடு சுதந்திரமான ஆதிபத்தியம் கொண்ட நாடு என்பதால் அந்நாட்டில் உள்ள வங்கிகள் தொடர்பான தகவல்களை வெளியிட ஜெர்மனி – இந்தியா ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது. இதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக்கியுள்ளது. இதுவரை மத்தியில் வந்துள்ள அரசுகள் ஜெர்மனியின் ஆட்சேபம் தொடர் பாக எந்த ஆதாரத்தையும் அளிக்க வில்லை.

சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கித் தகவல்களைப் பொறுத்தமட்டில், ஐ.நா.வின் ஊழலுக்கு எதிரான சாசனத்தில் இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன. இந்த சாசனத்தின்படி வங்கிக் கணக்கு களின் ரகசிய சட்டங்கள் எதுவும் கட்டுப்படுத்தாது. எனவே சுவிட்சர்லாந்து அரசுடன் இந்திய அரசு பேசி எதோ சாதித்துவிட்டதாக ஜெட்லி பெருமைப்பட்டுக் கொள்வது அபத்தமானதாகும். மேலும் இந்தத் தகவல்கள் நமக்கு சுவிட்சர்லாந்து அரசிடமிருந்து கிடைக்கவில்லை, இதர வழிகளில்தான் கிடைத்தன.

ஆட்சிக்கு வந்தால் 150 நாட்களில் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக, இப்போது முற்றிலும் பல்டி அடித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நரேந்திர மோடி அரசு, முந்தைய அரசு போலவே சாக்குபோகுகள் சொல்லிக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்