முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் தேர்தலை சந்திக்க தயாரா? காங். கேள்வி

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 21 - அரியானா, மகராஷ்டிரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக டெல்லியில் சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

மகராஷ்டிரம், அரியானா ஆகிய மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தல் முடிவில் இரு மாநிலங்களிலும் பாஜ தலைமையிலான ஆட்சி அமைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் வெற்றி பிரதமர் நரேந்திர மோடியின் அலைக்கும், பாஜக தேசிய தலைவர் அமீத்ஷாவின் அரசியல் உத்திக்கும் கிடைத்த வெற்றி என பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள டெல்லி சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயங்குவதாக பிரதேச காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் முகேஷ் சர்மா கூறினார். இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடந்த மே மாதம் மத்தியில் ஆட்சி அமைத்த நரேந்திர மோடிக்கு இன்னும் நாடு முழுவதும் அலை வீசுவதாக பாஜக தலைவர்கள் பெருமிதப்படுகின்றனர். அது உண்மையாக இருக்குமானால் டெல்லி சட்டசபைக்கு மட்டும் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை தீவிரமாக வலியுறுத்த அக்கட்சி ஏன் தயக்கம் காட்டுகிறது. டெல்லியில் தேர்தலை சந்திக்க பாஜக தயாரா? மகராஷ்டிரம், அரியானா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அதன் தாக்கம் டெல்லியில் எதிரொலிக்கவில்லை என்பதே உண்மை. டெல்லி சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தலை நடத்தினாலும் அதை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் எப்போதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் பிரச்சாரம் செய்ய தயார் நிலையில் காத்திருக்கின்றனர். ஆனால் அந்த உத்வேகம் பாஜகவினரிடையே காணப்படவில்லை. மகராஷ்டிரத்திலும், அரியானாவிலும் நிலவிய அரசியல் சூழ்நிலைகள் வேறு. டெல்லியில் உள்ள
அரசியல் நிலைமை வேறு. டெல்லியில் மக்கள் நம்பிக்கை இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால் அந்த வாய்ப்பை அக்கட்சி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இனியும் அந்த கட்சிக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தலை நடத்த துணை நிலை கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முகேஷ் சர்மா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்