முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலைகளை பழுதுநீக்கம் செய்ய அமைச்சர் உத்தரவு

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை: அக். 21: பருவ மழையினால் சேதமடைந்த நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பழுதுநீக்கம் செய்து போக்குவரத்து இடையூறுகளை கலைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க, அமைச்சர் எடப்பாடி  கே. பழனிசாமி அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.  

அம்மா அவர்களின் மேலான வழிகாட்டுதலின்படி நெடுஞ்சாலை  மற்றும்  சிறுதுறைமுகங்கள்துறை   அமைச்சர். எடப்பாடி  கே. பழனிசாமி நேற்று (20.10.2014)  வடகிழக்கு பருவ மழையினால் சேதமடைந்த நெடுஞ்சாலைத்துறையின் சாலைகளை பழுதுநீக்கம் செய்வது போக்குவரத்து இடையூறுகளை கலைவது தொடர்பான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையின் முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மற்றும் தலைமைப் பொறியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
 வடகிழக்கு பருவமழையினால் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் சாய்ந்த மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்தை சரிசெய்ய உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளும் களத்தில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார். மேலும் சென்னை மாநகரில் உள்ள 18 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்காவண்ணம் அப்புறப்படுத்தும் வகையில் 66 மின் மோட்டார்கள், 42 டீசல் மோட்டார்கள் ஆக மொத்தம் 108 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் சாலைகளில் தேங்கும் தண்ணீர் பத்து 2ழஞ நடமாடும் மோட்டார்கள் மூலம் அகற்றப்படுகிறது. சென்னை மாநகர் மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 360 கி.மீ. நீளச்சாலைகளிலும் 20 நபர்கள் கொண்ட 30 குழுக்கள் அமைத்து போக்குவரத்து தடைபடாவண்ணம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
சென்னை பெருநகர அலகில் நடைபெறும் திருமங்கலம் மற்றும் மூலக்கடை உயர்மட்டபாலப்பணிகளில் சேவைச்சாலைகள் யாவும் செப்பனிடப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சீராக சென்றுகொண்டிருக்கிறது.  கொடைக்காணலில் கொடை – பழனி மலைப்பாதையில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து சீராக செல்கிறது.
கடந்த இரு நாட்களில் பெய்த மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 20 கி.மீ. நீளச்சாலைகளில் ஓடுதளம் பாதிப்படைந்துள்ளன. இவை துரிதமாக சரி செய்யப்பட்டு வருகின்றன. இவைகளை விரைந்து சரிசெய்து மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு விரைந்து சீர்செய்யப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது. மலைப்பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி களப்பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் விழிப்புடன் செயல்பட்டு போக்குவரத்தினை உடனுக்குடன் சரிசெய்யுமாறு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்தென்காசி கோட்டத்தில் பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட  மாற்றுப்பாதையில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் போக்குவரத்து மாற்றுப்பாதையில் செல்கிறது.
அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணி மேற்கொள்வதற்கு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டு அவர்கள் சிறப்பாக பணியாற்றியமைக்கு ஆந்திர அரசின் விசாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர் தமிழக அரசினை பாராட்டி கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.  
மழை வெள்ளத்தினால் சாலைகளில் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் பணியாளர்கள் மூலமாக அப்புறப்படுத்துவதற்கும், சாலைகளில் ஏற்படும் அரிப்புகளை தடுப்பதற்கு சீரியமுறையில் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க  வேண்டும்  எனவும், வடகிழக்கு பருவமழையினால் கால்வாய்களில் மழைநீர் விரைந்து செல்வதற்கு ஏதுவாக பணியாளர்களை கொண்டு கண்காணிக்கும்படியும்,  தரைப்பாலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், மலைப்பிரதேச சாலைகளில் மண் சரிவுகள், மரங்கள் விழுந்துவிட்டால் உடனுக்குடன் அப்புறப்படுத்தி போக்குவரத்து  இடையூறின்றி செல்வதற்கு அனைத்து பணியாளர்களும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் இருக்க பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்