முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா பட்டாசு ஆலை தீ விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஆந்திராவில் முறைகேடாக நடத்தப்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் உள்ளே 30 பேர் சிக்கி இருப்பதாக அச்சம் நிலவுகிறது.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள காக்கிநாடாவில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் அங்கு அவசர நிலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதே இடத்தில் வியாபாரமும் நடந்தது.

இந்த நிலையில், இன்று மதியம் திடீரென எதிர்பாராத விதமாக தொழிற்சாலை இருக்கும் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு இருந்த பட்டாசுகள் அனைத்தும் சரமாரியாக வெடித்து சிதறியதில் தீ பெருமளவு பரவி மிகப் பெரிய அளவில் கொழுந்துவிட்டு எரிந்தது.

இதில் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் வேங்கடரமணா, தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட 13 பேர் விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரது நிலைமை மோசமானதாக உள்ளதென்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். 2 தீயணைப்புத் துறை வாகனங்கள் தீயின் வேகத்தை சற்று கட்டுப்படுத்தின.

ஆனால், கட்டிடத்தில் உள்ளே சுமார் 30 தொழிலாளர்கள் இருக்கலாம் என போலீஸார் அச்சம் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியாத நிலையில், தொழிற்சாலை முறைகேடாக உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், தற்போதைய நிலையில் உறுதியான பலி எண்ணிக்கை குறித்து கூற முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்தை உடனடியாக பார்வையிட்டு மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த துணை முதல்வர் என்.சின்ன ராஜப்பா, மாவட்ட ஆட்சியர் நீத்து பிரசாத் ஆகியோருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆணையிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்