முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருண் ஜெட்லியுடன் கோத்தபய ராஜபக்சே ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, அக் 22 - இந்தியா, இலங்கை இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நடவடிக்கை குறித்து டெல்லியில் பாதுகாப்பு துறை அணைச்சர் அருண்ஜெட்லியுடன் இலங்கை பாதுகாப்பு துறை செயலர் கோத்தபய ராஜபக்சே ஆலோசனை நடத்தினார்.

இலங்கை தலைநகர் கொழும்புக்கு அண்மையில்தான் இந்திய பாதுகாப்பு துறை செயலர் ஆர்.கே. மாத்தூர் சென்று டெல்லி திரும்பியிருந்தார். இந்த நிலையில் டெல்லி வந்துள்ள கோத்தபய ராஜபக்சேவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு பாதுகாப்பு துறை சார்ந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி, ஆயுதம், பயிற்சி ஆகியவற்றை இலங்கை அரசு பெற்று வருகிறது. நல்லெண்ண அடிப்படையில் நட்பு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் இந்தியாவில் உள்ள ராணுவ கல்லூரிகளில் படிக்கவும் மத்திய அரசு ஆண்டுதோறும் அனுமதி அளித்து வருகிறது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக இலங்கை அதிபரின் சகோதரரும், அந்நாட்டு பாதுகாப்பு துறை செயலருமான கோத்தபய ராஜபக்சே கடந்த ஞாயிறன்று டெல்லி வந்தார்.

இதையடுத்து பாதுகாப்பு துறையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை அவரது அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக்கில் திங்கட்கிழமை காலையில் கோத்தபய ராஜபக்சே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவருடன் டெல்லியில் உள்ள இலங்கை தூதர் சுதர்சன சேனவிரதனே, ஜெட்லியுடன் இந்திய பாதுகாப்பு துறை செயலர் ஆர்.கே. மாத்தூர் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த மே மாதம் அமைந்த பிறகு முதல் முறையாக கோத்தபய ராஜபக்சே டெல்லி வந்துள்ளார். இதையொட்டி அவருக்கு அருண்ஜெட்லி மத்திய அரசின் சார்பில் நினைவு பரிசு வழங்கினார். இதையடுத்து இரு தரப்பினரும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு, மீனவர்கள் பிரச்சினை, கடற்படை ரோந்து பணிகளில் ஒத்துழைப்பு, இலங்கை, இந்திய சிறைகளில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை பரஸ்பரம் விரைவாக விடுதலை செய்வது குறித்து பேசியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பின் முடிவில் வெளியே வந்த கோத்தபய ராஜபக்சே அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டார். இதே போல் அருண்ஜெட்லியும், ஆர்.கே. மாத்தூரும் கோத்தபயவுடனான சந்திப்பு பற்றிய விவரங்களை ஊடகங்களிடம் தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் இரு தரப்பினரின் சந்திப்பு குறித்த பாதுகாப்பு துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவின் அழைப்பின் பேரில் டெல்லிக்கு கோத்தபய ராஜபக்சே வந்துள்ளார். இந்தியா, இலங்கை இடையிலான ராணுவ பயிற்சி, கடற்போர் பயிற்சி, இந்திய ராணுவ கொள்முதல் திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக இருவரும் பேசினர். கடந்த வாரம் இரு நாட்டு கடற்படையினரும் நடத்திய கூட்டு ரோந்து தொடர்பான சந்திப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர். முதலாவது சந்திப்பு என்பதால் இந்த கூட்டத்தில் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பான அம்சங்கள் இரு தரப்பும் விவாதிக்கவில்லை என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்