முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்தி படம் வெளிவர ஆதரவு தந்த ஜெயலலிதாவுக்கு நன்றி

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, அக் 22 - நடிகர் விஜய்யின் கத்தி படம் திட்டமிட்டபடி இன்று தீபாவளியன்று ரிலீசாகிறது. இந்த படத்துக்கு சில தமி்ழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தயாரிப்பு நிறுவனமான லைகா பெயரை நீக்கி விட்டு படத்தை ரிலீஸ் செய்தால் எதிர்க்க மாட்டோம் என்று எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இது ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இரு தரப்பினர் இடையிலும் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் கத்தி படம் 450க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது. அமெரிக்காவில் 50 தியேட்டர்கள் இங்கிலாந்தில் 70 தியேட்டர்கள் என வெளிநாடுகளிலும் கணிசமான தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. கத்தி படம் திரையிடப்படும் தியேட்டர்களில் விஜய் கட்அவுட், கொடி தோரணங்கள ரசிகர்கள் அமைத்துள்ளனர். விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் பூக்கடை குமார், அம்பத்தூர் பாலமுருகன், தி. நகர் அப்புலு, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். கத்தி படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கான், ஐங்கரன் கருணாமூர்த்தி தயாரித்துள்ளனர்.

கத்தி படம் மதுரையில் ரிலீஸ் செய்யப்படுவதையொட்டி ரசிகர்கள் யானை பரிவட்டத்துடன் பால்குடம் எடுத்து விஜய் படத்துக்கு பாலாபிஷேகம் சசெய்கிறார்கள்.

மதுரை மாவட்ட தலைமை விஜய் நற்பணி மன்ற தலைவர் தங்கபாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி தினத்தில் வெளிவரும் கத்தி திரைப்படம் தொடக்க நிகழ்ச்சி மதுரை புதுநத்தம் ரோட்டில் உள்ள தமிழ் ஜெயா திரையரங்கில் நடக்கிறது. அங்கு புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க, ரசிகர்கள் பால்குடம் எடுத்து வருகிறார்கள். கத்தி திரைப்படத்துக்கு எலுமிச்சை மாலை, வெற்றிலை மாலை, சந்தன மாலை ஆகியவை யானை பரிவட்டத்துடன் மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் விஜய் தலைமை மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். கத்தி திரைப்படம் வெளியிடப்படும் அனைத்து தியேட்டர்களிலும் மதுரை மாவட்ட தலைமை மன்றம் சார்பில் பாலாபிஷேக நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் ரசிகர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட தொண்டரணி இளைய தளபதி மக்கள் இயக்கம் சார்பில் கல்லாணை தலைமையில் சிறப்பு வழிபாடு, இனிப்பு வழங்குதல் என பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முதல் நிகழ்ச்சியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன் பிறகு மேளதாளத்துடன் ஊர்வலமாக மதுரை வெற்றி திரையரங்கிற்கு ரசிகர்கள் செல்கின்றனர். அங்கு முதல் காட்சி பார்ப்பவர்கள் அனைவருக்கும் இனி்ப்பு வழங்கப்படுகிறது. விஜய்யின் 56வது படம் என்பதால் 5 6 ரசிகர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வெற்றி தியேட்டருக்கு சென்று விஜய் படத்திற்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

கத்தி பட விவகாரம் குறித்து நடிகர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

என்னை நேசிக்கும் அன்பான தமிழ் மக்களுக்கும், அன்பு ரசிகர்களுக்கும் வணக்கம், சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்தனர். அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் இருந்து லைகா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒப்பு கொண்டனர். எனவே இந்த பிரச்சினை சுமூகமாக முடிந்து விட்டது. எனவே எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும் கத்தி திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். கத்தி திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும், தமிழக காவல் துறைக்கும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைகா பெயரை நீக்கிய தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்