முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 22 – தீபாவளி பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:– தீபாவளி திருநாள் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், ஒற்றுமையுடனும் கொண்டாடும் சிறப்பான பண்டிகையாகும். ஏழை, நடுத்தரமக்களின் வாழ்வில் இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நாளாக இதை போற்றுகிறார்கள்.

கடவுளை வணங்கி, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்பு வகைகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி கொண்டாடுவதை, ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கடைபிடிக்கிறார்கள்.

இந்த இனிய நாளில் இருந்தாவது தங்களின் துன்பங்களும், துயரங்களும் நீங்கி, செழிப்பான வாழ்வு வாழ வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் தீபாவளி திருநாளை கொண்டாடுகிறார்கள்.

ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வு சிறக்கட்டும். தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், நிம்மதியோடும் தீபாவளியை கொண்டாட வேண்டுமென நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்:– பிரதமர் நரேந்திரமோடி இன்று நம் நாட்டினை ஒளி நிறைந்த வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்கிறார். எல்லாத்துறைகளிலும் முன்னேற்றத்தை நாம் காண துவங்கியுள்ளோம். அதே போன்று நம்நாடு தூய்மையானதாக விளங்க தூய்மை திட்டத்தையும் நடைமுறை படுத்தி வருகிறார். நரேந்திரமோடி வழிகாட்டுதழில் நம் திறமைகளை வளர்த்து நாட்டின் வளர்ச்சியில் பணிபுரிந்து நாட்டை ஒளிநிறைந்ததாக மாற்றுவது நம் தலையாய கடமையாக அமையட்டும்.

முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன்:– தமிழக விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், வாழ்வில் துயரங்கள் தொலைய வேண்டும். வளம் பெருகி நலம் நிலவ வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும், மீனவர் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு கிடைத்து அவர்களுக்கு நிம்மதியான வாழ்வும், நிலைத்த மகிழ்ச்சியும் கிட்ட வேண்டும்.

இத்தீபாவளித் திருநாள் ஒளிகாட்டி அப்பிரச்சினைகளின் தீர்வுக்கு வழிகாட்ட வேண்டும். அதற்கு இறைவன் அருள்புரிய வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:– ஒரு மதம் சார்ந்த பண்டிகை என்றாலும் எல்லா மதத்தினரும், இனத்தினரும் இணைந்து கொண்டாடும் இத்தீபாவளித் திருநாளில், தீவிரவாதத்தை தீயிட்டு முழுமையாய் ஒழிப்போம். நாட்டிலுள்ள அனைவர் மத்தியிலும் நல்லிணக்கம், மகிழ்ச்சி, சமாதானம், ஒருமைப்பாட்டு உணர்வுகள் மேம்பட ஒற்றுமையாய் உழைப்போம் என்று சபதமேற்போம்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:– தீப ஒளித்திருநாள் இந்திய தேசத்தின் அறியாமை இருளை, ஏழ்மை இருளை விரட்டி, மகிழ்ச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்படுத்தும் நன்னாளாக அமையட்டும். நம் கொண்டாட்டங்களின் பின்னணியில் லட்சக் கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் மகிழ்ச்சி உள்ளது என்ற வகையில், இந்தியாவில், குறிப்பாக சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவோம்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:– நாட்டில் வறுமை ஒழியட்டும் செழுமை நிறைந்து அமைதி தவழட்டும் நோய் நொடி இல்லாத நிம்மதி பெருகட்டும்,

விவசாயம் செழிக்கட்டும், தொழில் வளம் சிறக்கட்டும், விஞ்ஞானம் வளரட்டும், விரைவில் இந்தியா வல்லர சாகட்டும் இந்தியர்கள் அனை வருடைய வாழ்விலும் ஏற்றம் பெருகட்டும். அதர்மம் அழிந்து தர்மம் ஜெயிக்கட்டும். ஆனந்தமும் சாந்தமும் நிலவட்டும்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:– நரேந்திர மோடி நல்லாட்சியில் இந்தியா முன்னனேற்றப்பாதையில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. நரேந்திர மோடி உலக மக்கள் அனைவராலும் ஈர்க்கப்பட்டு போற்றப்படுகின்றார்.

சாதனை மேல் சாதனைகள் படைத்து வெற்றியின் சிகரத்தில் வீற்றிருக்கின்றார். நாட்டினை சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்று பட்டு வெல்வோம் என்று இந்த நல்லநாளில் சபதம் ஏற்போம்.

மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன்:– தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உள்ள இடைவெளியை, வெறுப்பை நீக்கி ஒற்றுமையை வளர்ப்போம். தீமைகளை ஒழித்து நன்மைகளை உருவாக்க தீபாவளித் திருநாளான அன்று நாம் அனைவரும் சூளுரை ஏற்போம்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் தமிழகத்தில் சாதி மதத்தை வேறோடு ஒளித்து புத்தன் போதித்தது போல் டாக்டர் அம்பேத்கர் வழியில் நடந்து புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடிட வாழ்த்துகிறோம்.

அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி.எஸ்.டி. நல கூட்டமைப்பு தேசிய தலைவர் ஆதிகேசவன்:– சாதி மத வேறுபாடுகளை களைத்து அனைத்து மக்களும் தீபாவளி திருநாளில் அனைத்து மக்கள் வாழ்வில் ஒளி வீசவும், தீவிர வாதத்தை ஒழித்து நாடு சுபிட்சம் அடையவும் இனிப்புகள் வழங்கி தீப திருநாளை கொண்டாடிடுவோம்.

மேலும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு:–

புரட்சி பாரம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், அம்பேத்கர் முன்னணி கழக தலைவர் திண்டிவனம் ஸ்ரீராமுலு, திராவிட முன்னேற்ற மக்கள் கழக தலைவர் ஆ.ஞானசேகரன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்