முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை எதிரொலி: குற்றால அருவிகளில் குளிக்க தடை

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.22 - வடகிழக்கு பருவ மழை சரியான நேரத்தில் தொடங்கி பெய்து வருவதால் தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், வீரானம், பூண்டி உள்ளிட்ட 4 ஏரிகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. எனவே அடுத்த மே மாதம் வரை சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது.குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து விழுவதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வரும் தொடர்மழை காரணமாக, தமிழ்நாடு முழுவதும் அணைகள் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.

வடகிழக்குப் பருவமழையினால் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நீடிக்கும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.45 அடியாக நீடிக்கிறது. நீர் வரத்து 12,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

பெரியாறு 125.5 அடியில் இருந்து 126.6 அடியாகவும், வைகை 43.18 அடியில் இருந்து 44.9 அடியாகவும் உயர்ந்திருக்கிறது.

பவானி சாகர் அணை நீர் மட்டம் 70.18 அடியில் இருந்து 73.40 அடியாக அதிகரித்துள்ளது. அமராவதி அணை 67.15 அடியில் இருந்து 68.88 அடியாகவும் உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த கன மழை பெய்துவருகிறது. மழையினால் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரையிலான விபரப்படி பாபநாசத்தில் அதிகபட்சமாக 95 மி.மீ.,மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 473 கனஅடி நீர்வரத்து இருந்தது. நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் முந்தைய தினத்தைவிட 4.20 அடி உயர்ந்து 75.65 அடியாக இருந்தது.

சேர்வலாறு அணையில் 60 மி.மீ.,மழை பதிவானது. வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 95.80 அடியாக உயர்ந்தது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 59.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 60 அடியாகவும் இருந்தது. குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து அதிகஅளவில் வெள்ளம் கொட்டுகிறது.

நெல்லை மாவட்டத்திலுள்ள பிற அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேக்கரை அடவி நைனார் கோவில் நீர்தேக்கம் வேகமாக நிரம்பிவருகிறது. குண்டாறு அணை நிரம்பியுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டும் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை 32.7 அடியில் இருந்து 35.75 அடியாகவும், பெருஞ்சாணி, 62.5 அடியில் இருந்து 65.50 அடியாகவும் உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி 48.7 அடியில் இருந்து 49.7 அடி, சாத்தனூர் 72.6 அடியில் இருந்து 72.55 அடி என நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது.

பரம்பிகுளம், ஆழியாறு திருமூர்த்தி, சோலையாறு அணைகளில் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என்றாலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, பருவமழை தொடர்வதால் அனைத்து அணைகளும் இந்த மழை காலத்தில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் மழையின் காரணமாக தீபாவளி பண்டிகை வியாபாரமும் கொண்டாட்டமும் பிசு பிசுத்து போய் உள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்