முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்கு அரவணை பிரசாதம்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக் 24 - கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை வழிபாடுகள் பிரசித்தி பெற்றவை. இவ்விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், 18ம் படி ஏறி அய்யப்பனை தரிசித்து திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் பிரசாதமாக அரவணை மற்றும் அப்பம் ஆகியவற்றை வாங்கி செல்வது வழக்கம். இவை தட்டுப்பாடின்றி கிடைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கோயிலின் செயல் அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

சபரிமலை அய்யப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலங்களில் வரும் பக்தர்களுக்காக 2 50 மி.லிட்டர் கொண்ட ஒரு கோடியே 40 லட்சம் அரவணை பிரசாத டின்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 27ம் தேதி முதல் இவற்றை தயாரிக்கும் பணி தொடங்கும். இது போல 75 லட்சம் அப்பம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். அப்பம் தயாரித்து அதிகபட்சம் 2 வாரங்கள் மட்டுமே இருப்பு வைத்து கொள்ள முடியும் என்பதால் இதனை தயாரிக்கும் பணி அடுத்த மாதம் 12ம் தேதி முதல் தொடங்கும். பக்தர்கள் இதனை வாங்குவதற்கு ஆன்லைன் மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். ரூ. 160க்கு 2 பாக்கெட் அப்பமும், ஒரு டின் அரவணையும் வழங்கப்படும். அதனுடன் சந்தனமும், விபூதியும் இருக்கும். ரூ. 270க்கான டோக்கனுக்கு கூடுதலாக ஒரு டின் அரவணையும், 2 பாக்கெட் அப்பமும் வழங்கப்படும். சபரிமலை சன்னிதானத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் கியூ சென்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கியூ திருமுற்றத்தில் தொடங்கும். அங்கிருந்து முக்கிய பிரமுகர்களுக்கென தனி வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கென தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்