முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் முதலீடுகளை வரவேற்கிறோம்: ஓ.பி.எஸ்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.24 - அமெரிக்காவிலிருந்து தமிழகத்துக்கு அதிக தொழில் முதலீடுகளை வரவேற்கிறோம் என்று, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரிடம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கேத்லின் ஸ்டீபன்ஸ் சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்கத் துணைத் தூதர் பிலிப் மின், அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரி கல்பனா மூர்த்தி, அமெரிக்கத் தூதரின் சிறப்பு உதவியாளர் அட்ரியன் பிராட், தமிழக அரசு தலைமைச் செயலர், ஆலோசகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கேத்லின் ஸ்டீபன்ஸ், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசினார். இருவரும் இந்தியாவில் தமிழகத்துக்கான நல்லுறவுகள், வணிகத் தொடர்புகள் குறித்து பேச்சு நடத்தினர். அப்போது தமிழகத்தில் அமெரிக்காவின் போர்ட் மற்றும் கேட்டர் பில்லர் நிறுவனம் முதலீடு செய்துள்ளதை அமெரிக்கத் தூதர் குறிப்பிட்டார்.

அப்போது மேலும் அதிக அமெரிக்க தொழில் முதலீடுகளை தமிழகம் வரவேற்கிறது. தமிழகம் விஷன் 2023 என்ற இலக்குடன் செயல்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டுத் தொழில் முதலீடுகளுக்கு தமிழகம் சிறந்த இடம் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை நிதி நகரம், மதுரை, தூத்துக்குடி தொழில் காரிடார் திட்டம், உயரிய போக்குவரத்துத் திட்டம் போன்ற அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் குறித்து அமெரிக்கத் தூதரும், தமிழக முதல்வரும் விவாதித்தனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் கூட்டத்தில் அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்பையும், முதலீட்டையும் எதிர்பார்ப்பதாக, முதல்வர் தெரிவித்தார்.

தமிழகத்தில் உயர் திறமை கொண்ட மக்கள் இருப்பதால், சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் மூலம் அதிக அளவு வேலைவாய்ப்பு விசாக்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் பெண்கள் பல்வேறு சிறு, குறு தொழில்களில் சிறந்து விளங்குவதைக் கண்டு ஆச்சரியம் ஏற்படுகிறது. வழக்கமாக அமெரிக்க முதலீட்டாளர்கள் புதுடில்லிக்கு மட்டுமே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், எதிர்காலத்தில் அவர்கள் சென்னைக்கும் வந்து தங்கள் முதலீட்டு வாய்ப்பை தெரிந்துகொள்வர் என்று அமெரிக்கத் தூதர் கேத்லின் ஸ்டீபன்ஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதர் பிலிப் மின், அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரி கல்பனா மூர்த்தி, அமெரிக்கத் தூதரின் சிறப்பு உதவியாளர் அட்ரியன் பிராட் ஆகியோருடன் தலைமைச் செயலர் மோகன் வர்கீஷ் சுங்கத், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்