முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூர் பகுதியில் கர்நாடக வீரர்கள் துப்பாக்கிச் சூடு

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

மேட்டூர், அக்.25 - மேட்டூர் அருகே கொளத்தூர் வனப்பகுதியில் விலங்கு வேட்டையாட வந்த கும்பல் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. காயமடைந்தவரை தூக்கிக் கொண்டு மற்றவர்கள் ஓடிவிட்டனர். தப்பி ஓடிய கும்பல் குறித்து கொளத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே ஏமனூர் பகுதியில் தமிழக - கர்நாடக எல்லை உள்ளது. இங்குள்ள காட்டுக்குள் அடிக்கடி மர்ம நபர்கள் நுழைந்து, மான், காட்டு பன்றி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

கர்நாடக அதிரடிப்படை வீரர்கள் காட்டுக்குள் ரோந்து சென்று, வேட்டை கும்பல் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கர்நாடக எல்லை பகுதியில் உள்ள காட்டுக்குள் மர்ம கும்பல் வேட்டையாடுவதாக, கர்நாடக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காட்டுக்குள் இருந்த வேட்டை கும்பலை கர்நாடக வனத்துறையினர் சுற்றி வளைத்தனர்.

அவர்கள் பிடியில் இருந்து வேட்டை கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தது. இதனையடுத்து, கர்நாடக வனத்துறையினர் அக்கும்பல் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. வேட்டை கும்பலை சேர்ந்தவர்கள் குண்டு காயமடைந் தவரை தூக்கிக் கொண்டு தலை மறைவாகிவிட்டனர். இதுகுறித்து கர்நாடக வனத்துறையினர் கொளத்தூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

கொளத்தூர் போலீஸார் கோவிந்தபாடி கிராமத்துக்கு சென்று வேட்டைக்கு சென்றவர்கள் குறித்து விசாரித்தனர். கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, பழனி, லட்சுமணன், முத்துசாமி, சேட்டு ஆகிய ஐந்து பேர் வேட்டை நாய், துப்பாக்கியுடன் காட்டுக்குள் சென்றதாகவும், அவர்கள் வீடு திரும்பவில்லை என்றும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், வேட்டைக்கு சென்றவர்களில் ராஜாவுக்கு குண்டு காயம் ஏற்பட்டதாகவும், அவரை ரகசிய இடத்தில் வைத்து வேட்டை கும்பல் சிகிச்சை அளிப்பதாகவும் போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்