முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய காற்றழுத்த தாழ்வு: மேலும் 3 நாள் மழை நீடிக்கும்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 25 - வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 18-ந்தேதி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

பருவமழை தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தீபாவளிக்கு முன்தினமான 21-ந்தேதி, தீபாவளி நாளான 22-ந்தேதி ஆகிய நாட்களில் மழையின் வேகம் சிறிது குறைந்தது. தற்போது பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. பலத்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தும், மின்னல் தாக்கியும் நீரில் மூழ்கியும் நேற்று வரை 7 பேர் உயிர் இழந்தனர். பல ஊர்களில் வெள்ளம் புகுந்துள்ளது. குளம் உடைப்பு, அதிக வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வயல்கள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

காவிரி டெல்டா பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக நெல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ள சேதத்தை தவிர்க்கும் வகையில் மேட்டூர் அணை மூடப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல்வேறு அணைகள் நிரம்பி உள்ளன. இதன் காரணமாக திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாக அந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையை ஒட்டியுள்ள மன்னார்வளைகுடா பகுதியில் வளி மண்டலத்தில் ஏற்பட்ட மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்தது. பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று மாலையில் இருந்து விடிய விடிய மழை பெய்தது. தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக இன்று (நேற்று) முதல் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் பல இடங்களில் பலத்த மழை பெய்யும்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்