முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர்களுக்கு உதவிகள்: அமைச்சர் வழங்கினார்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

மதுரை, அக்.26 - தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு தலைமையில் நேற்று (25.10.2014) மடீட்சியா அரங்கில் நடைபெற்றது.  இவ்விழாவில் 1594 பயனாளிகளுக்கு ரூ.43,20,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ பேசும்பொழுது தெரிவித்ததாவது:
தமிழக அரசால் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (பணி முறைப்படுத்துதல் மற்றும் பணி நிலைமைகள்) சட்டம் 1982ல் இயற்றப்பட்டது.  இதன்படி, இச்சட்டத்தின் இணைப்பில் உள்ள 69 தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சமூக பாதுகாப்பு நலத்திட்டம் வழியாக கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மற்றும் விபத்து மரணம், விபத்து ஊனம் மற்றும் வயது முதிர்ந்த நிலையில் பாதுகாப்பிற்கென மாதாந்திர ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.  அமைப்புசாரா தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழகஅரசு வழங்கிவருகிறது.  பதிவுபெற்றுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழக அரசு, ஓய்வூதியத் தொகையினை ரூ.500லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கியுள்ளது.  இது நாடு முழுவதிலுமுள்ள நல வாரியங்களால் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையைவிட கூடுதலாகும்.
உயர்கல்விக்கான உதவித்தொகை கூடுதலாக ரூ.2000/- உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.  பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.6000/- மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது.  கருச்சிதைவுக்கான உதவித்தொகை ரூ.3000/- வழங்கப்படுகிறது.  வேறு எந்த மாநிலத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதில்லை.  சட்டமன்ற விதி 110-ன்கீழ் கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் விபத்தில் மரணமடைந்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,00,000/- என்பதை ரூ.5,00,000ஃ- என உயர்த்தி உதவித்தொகை வழங்குவதற்கும், 50 அல்லது அதற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்தால், அவ்விடத்தில் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்தவும், கட்டுமான பணியாளர்களுக்கு 500 படுக்கைவசதியுடன் தங்குமிடம் ஏற்படுத்தித்தருவதற்கும், நடமாடும் மருத்துவமனை  ஏற்படுத்தித்தரவும், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் புதுப்பித்தல் காலம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற நடைமுறை இருந்து வந்தது.  தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ளவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கைமரணம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகை, விபத்துஊனம் உதவித்தொகை, ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள், உடலுழைப்பு நல வாரியம் மூலம் 571 பயனாளிகளுக்கு ரூ.18,22,750 மதிப்பிலும், ஓட்டுநர் நல வாரியம் மூலம் 192 பயனாளிகளுக்கு ரூ.3,94,750 மதிப்பிலும், கட்டுமான நலவாரியம் மூலம் 831 பயனாளிகளுக்கு ரூ.21,02,500 மதிப்பிலும் ஆக மொத்தம் 1594 பயனாளிகளுக்கு ரூ.43,20,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்புபிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ் (மதுரை-வடக்கு), கே.தமிழரசன் (மதுரை-கிழக்கு),  எம்.வி.கருப்பையா (சோழவந்தான்),  ஆர்.சுந்தர்ராஜன் (மதுரை-மத்தியம்), தொழிலாளர் இணை ஆணையர்  வெ.இராஜா, மதுரை மாநகராட்சி துணை மேயர் கு.திரவியம், மாவட்ட ஊராட்சி தலைவர் மு.தர்மராஜா, மாமன்ற உறுப்பினர்கள் புதூர் அபுதாகீர், டி.ராமன், அரசு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துணை ஆணையர்  எம்.இராதாகிருஷ்ணபாண்டியன்  வரவேற்புரையாற்றினார்.  தொழிலாளர் அலுவலர் (ச.பா.தி) (பொறுப்பு) பெ.சுப்பிரமணியன் நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்