முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் 31-ல் புஷ்ப யாகம்: 2 நாள் சேவை ரத்து

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, அக்.28 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி வருடாந்திர புஷ்ப யாகம் நடக்கிறது. இதையொட்டி 2 நாட்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் வெங்கடேஸ்வர சுவாமியின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். இதையொட்டி இந்தாண்டு வரும் 31-ஆம் தேதி வருடாந்திர புஷ்ப யாகம் நடக்கிறது. முன்னதாக கோயிலில் 30-ஆம் தேதி இரவு அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது.

31-ஆம் தேதி காலை ஏழுமலையானுக்கு வழக்கம் போல் 2 அர்ச்சனை, 2 நைவேத்தியம் முடிந்த பிறகு உற்சவ மூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். அதன் பிறகு சாமந்தி, சம்பங்கி, ரோஜா, துளசி உள்ளிட்ட 18 வகையான மலர்களை கொண்டு சுவாமிக்கு 20 முறை புஷ்ப யாகம் நடத்தப்பட உள்ளது.

இதை முன்னிட்டு 30-ஆம் தேதி வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை, 31-ஆம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

நேற்று முன் தினம் அதிகாலை முதலே 77 ஆயிரத்து 119 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உள்ளனர். நேற்றைய நிலவரப்படி இலவச தரிசனத்திற்காக 20 அறைகளில் காத்திருக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 12 மணி நேரம் ஆகிரது. அதே போல் மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்கள் திவ்ய தரிசனத்திற்காக 5 அறைகளில் காத்திருந்து 5 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்கின்றனர். ரூ.300 க்கான சிற்பபு தரிசனத்திற்கு ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்