முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசன் அலி கான் மீதான வழக்கை விசாரிக்க நடவடிக்கை

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக்.28 - வெளிநாட்டில் கருப்புப் பணத்தை முடக்கி வைத்துள்ள புனேவைச் சேர்ந்த குதிரை பண்ணை உரிமையாளர் ஹசன் அலி கான் மீதான வழக்கை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு செய்து பெற்ற பணத்தையும், சட்டவிரோதமாக ஆயுத விற்பனை தொடர்பான பணப் பரிவர்த்தனை மூலம் பெற்ற பணத்தையும், ஸ்விட்சர்லாந்து வங்கிக் கணக்கில் ஹசன் அலி கான் பதுக்கி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியா, ஸ்விட்சர்லாந்து அதிகாரிகளிடையே நடைபெற்ற கூட்டத்தில், ஹசன் அலி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு தேவையான தகவல்களைத் தர ஸ்விட்சர்லாந்து அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறியதாவது:

ஹசன் அலி மீதான விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அவர் ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் வைத்திருந்த கணக்கு விவரங்கள் குறித்த தகவலை அளிக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அவருக்கும் ஆயுத வியாபாரி ஒருவருக்கும் இடையேயான பணப் பரிமாற்றம் தொடர்பாக எங்களிடம் உள்ள ஆவணங்களை ஸ்விட்சர்லாந்து அதிகாரிகளிடம் அளித்து சரிபார்க்க திட்டமிட்டுள்ளோம்.

ஹசன் அலியின் வங்கிக் கணக்கில் இருந்து 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள், வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களைப் பெற கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருந்தோம். அந்த விவரங்களை தருவதற்கு ஸ்விட்சர்லாந்து அதிகாரிகள் இப்போது முன்வந்துள்ளனர்" என்றனர்.

ஹசன் அலி கான் மீதான வழக்கை விரைவாக நடத்த வேண்டும் என்று கருப்புப் பணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவும் வலியுறுத்தி வருகிறது. ஸ்விட்சர்லாந்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்களை உடனடியாக பெறுமாறு வருமானவரித் துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்