முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாதாந்திர புதிய பால் அட்டை மீண்டும் வினியோகம்

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 29 – தமிழகம் முழுவதும் ஆவின் பால் 25 லட்சம் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 11 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் வழங்கப்படுகிறது.

இதில் 5 லட்சம் குடும்பங்களுக்கு 7 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் பால் மாதாந்திர அட்டை திட்டம் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 12 லட்சம் மாதாந்திர அட்டைகள் உள்ளன.

இந்த அட்டை மூலம் வழங்கப்படும் பால் விலை சில்லறை விலையை விட ரூ.2 குறைவாக இருப்பதால் பொது மக்களிடம் மாதாந்திர அட்டை திட்டம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது வைத்திருக்கும் மாதாந்திர அட்டைகளின் காலம் நவம்பர் 15–ந் தேதியுடன் முடிவடைகிறது.

நவம்பவர் 1–ந் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்படுவதால் அட்டைதாரர்கள் நவம்பர் 1 முதல் 15 நாட்களுக்கான கூடுதல் விலையை செலுத்த வேண்டும். நவம்பர் 16 முதல் புதிய விலையில் அட்டை வழங்கப்படும்.

கடந்த 3 மாதமாக பால் அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அட்டை வழங்கப்படவில்லை. பால் கொள்முதல் குறைவு மற்றும் விலை குறைவால் ஏற்பட்ட நஷ்டத்தை தவிர்ப்பதற்காக ஆவின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

தற்போது ஆவின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டதால் கூட்டுறவு மையங்களுக்கு பால் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே 3 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புதிய அட்டை மீண்டும் வினியோகம் செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் மாதாந்திர அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக ஆவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாதாந்திர பால் அட்டைக்கு புதிய கட்டணத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை விவரம் வருமாறு:–

ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்) ரூ.1020, நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை) ரூ.1170, நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு) ரூ.1290, இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா) ரூ.990.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்