முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்திரி - கடுகு மரபணு ஆய்வை அனுமதிக்க எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 29– மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கத்தரிக்காய், கடுகு, கொண்டைக்கடலை உள்ளிட்ட 15 உணவுப் பயிர்களை இந்தியாவில் பயிரிடுவதற்கு களசோதனைக்கு அனுமதி அளிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த  ஆய்வை அனுமதிக்க கூடாது என்று வைகோ வலியுறுத்தி உŸsh®.

இது குறித்து   ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றதும் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நாட்டின் வேளாண்மைத்துறை வளர்ச்சிக்கு இரண்டாவது பசுமைப் புரட்சியை அறிமுகம் செய்வோம் என்று கூறப்பட்டது. ‘புரோட்டீன் புரட்சி’ என்ற பெயரால், மரபு வழியிலான இந்திய விவசாயத்தை உயிரி தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மாற்றி அமைக்கப் போவதாக மோடி அரசு அறிவித்தது.

கடந்த ஆகஸ்டு மாதம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கத்தரிக்காய், கடுகு, கொண்டைக்கடலை உள்ளிட்ட 15 உணவுப் பயிர்களை இந்தியாவில் பயிரிடுவதற்கு களசோதனைக்கு அனுமதி அளிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2010–ல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் சாகுபடி செய்வதற்கான அனுமதி அளித்த போது நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு பின்வாங்கியது. மோடி அரசும் காங்கிரஸ் அரசை பின்பற்றி, மரபணு மாற்றுப் பயிர்களுக்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்க முன்வந்தபோது இந்த முடிவை கைவிட வேண்டும் என்று விவசாயிகளும் நாட்டின் மரபு சார்ந்த வேளாண்மையை பாதுகாக்கக் குரல் எழுப்புவர்களும், அரசியல் கட்சிகளும் வற்புறுத்தி வந்தனர்.

ஆனால், எதிர்ப்புகளை அலட்சியம் செய்துவிட்டு மோடி அரசு மரபணு மாற்று பி.டி.கத்தரி, கடுகு ஆகிய பயிர்களை சாகுபடி செய்வதற்கு கள ஆய்வு அனுமதியை வழங்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. பி.டி.பருத்தியை பயிரிட்ட ஆந்திரா, மராட்டியம் மற்றும் மத்திய பிரதேச விவசாயிகள் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி அடைந்து தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். பாரம்பரியமான பருத்தி விதைகள் அழிக்கப்பட்டு, தற்போது விதைகளுக்காக அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ‘மான்சாண்டோ’வை நம்பி இருக்கின்ற நிலைக்கு இந்திய விவசாயிகள் தள்ளப்பட்டு விட்டனர்.

மரபணு மாற்று பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஆய்வுகள் நடத்தி பரிந்துரைத்த நிறுவனங்கள் எல்லாம் மான்சாண்டோ, மாஹிகோ போன்ற பன்னாட்டு ஏக போக நிறுவனங்களின் முகவர்களாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பி.டி.விதைகளை பயன்படுத்தும்போது நிலங்கள் பாழாவதுடன் மரபணு மாற்று உணவுப் பயிர்களை உட்கொள்ளும் மனிதர்களும் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களைத் தொடர்ந்து உட்கொண்டால் சிக்கில் செல் அனீமியா என்ற நோய் ஏற்பட்டு, ரத்த சிவப்பு அணுக்கள் மாற்றம் அடைந்து ரத்தக் குழாய்க்குள் நுழைய முடியாத நிலை ஏற்படும். இதனால் மனிதர்களின் உயிருக்கு கேடு விளையும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மான்சாண்டோ நிறுவனத்தின் சொந்த நாடான அமெரிக்காவில் உள்ள சுற்றுப்புறச் சூழலுக்கான மருத்துவக் கழகம், மரபணு மாற்றுப் பயிர்களை உண்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் பறிபோய், மனநலம் பாதிக்கப்படும் என்று பி.டி. பயிர்களுக்கு தடை விதிக்குமாறு பரிந்துரை செய்திருக்கிறது.

இந்தியாவின் மரபு சார்ந்த விவசாயத்தை ஒழித்துக்கட்டிவிட்டு, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களிடம் விவசாயத்துறையை அடமானம் வைத்திடும் வகையில் பாரதிய ஜனதா கட்சி அரசு, பி.டி.கத்தரி, கடுகு போன்ற உணவுப் பயிர்களுக்கு அனுமதி வழங்கியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே உடனடியாக மத்திய அரசு மரபணு மாற்றுப் பயிர்கள் சாகுபடிக்கு வழங்கி உள்ள களஆய்வு சோதனைக்கான அனுமதியை திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்