முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருச்செந்தூர், அக்.29 -  திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது. இதைக் காண கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

 திருச்செந்தூரில் முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக காட்சி தருகிறார். கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுவது கந்தசஷ்டி விழாவாகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 24ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர்.
 விழா நாட்களில் தினமும் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர் யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு உச்சிகால பூஜை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
 கந்தசஷ்டி 5ம் நாளான நேற்று மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முக விலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதைத் தொடர்ந்து மாலை ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின், சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்டு தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
 கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்றுஅதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் நடக்கிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
 மாலை 4.35 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். தொடர்ந்து கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சந்தோஷ மண்படத்தில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடாந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி&தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.
 ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் ஒவ்வொரு குழுக்களாக அமர்ந்து முருகனின் பக்தி பாடல்கள் பாடி வருகிறார்கள். சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களின் பாது காப்பு கருதி,  கடற்கரையில் கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
 7&ம் நாளான நாளை அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
 அதிகாலை 5 மணி அளவில் அம்பாள் சேர்க்கையில் இருந்து தபசு காட்சிக்கு புறப்படுகிறார். மாலை 5 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.
 பக்தர்களின் பாதுகாப்பு கருதி துணை போலீஸ் சூப்பிரண்டு சௌ.கோவிந்தராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்