முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ-12-ல் வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை, அக்.30 - நவம்பர் 12-ம் தேதி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவது ஏன்? என்று வங்கி ஊழியர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் சி.எம்.பாஸ் கரன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச். வெங்கடாசலம் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:

நாடு முழுவதும் 2009-ம் ஆண்டு 47 ஆயிரமாக இருந்த வங்கிக் கிளைகள், 2012-ம் ஆண்டு 67 ஆயிரமாக அதி கரித்தது. இப்போது சுமார் 80 ஆயிரம் வங்கிக் கிளைகள் உள்ளன. 2008-09-ம் ஆண்டு ரூ.66 ஆயிரம் கோடியாக இருந்த வங்கிகளின் மொத்த லாபம், 2012-13-ம் ஆண்டு 1 லட்சத்து 21 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.

ஆனால், வங்கிகளுக்கு வராக்கடன் ரூ.70 ஆயிரம் கோடி என்றும், ரூ.52 ஆயிரம் கோடி மட்டுமே மொத்த லாபம் என்றும் இந்தியன் வங்கிகள் சங்கம் கூறுகிறது. அதனால்தான் நாங்கள் கேட்ட ஊதிய உயர்வைத் தர முடியாது என்கின்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரி களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, 2007-ம் ஆண்டு 17.5 சதவீதம் ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட்டது. இப்போது 25 சதவீதம் ஊதிய உயர்வு கேட்கிறோம். ஆனால், 11 சதவீதம் மட்டுமே அளிக்க முடியும் என்கிறார்கள். இதுதொடர்பாக 13 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.

எனவே, நவம்பர் 12-ம் தேதி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதில், நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டில் 6 ஆயிரம் வங்கிக் கிளைகளைச் சேர்ந்த 75 ஆயிரம் பேர் பங்கேற்பர்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு கோருகிறோம். ஆனால், 55 வயதுக்குப் பிறகு வங்கி ஊழியரின் திறமைக்கு ஏற்ப பணி வழங்கப்படும் அல்லது ஓய்வு அளிக்கப்படும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் இடமாற்றம், ஓய்வுக்குப் பிறகும் ஒழுங்கு நடவடிக்கை, விலை உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்குவதற்குப் பதிலாக ஊழியரின் திறனுக்கு ஏற்ப ஊதிய உயர்வு என்று எங்களது பணி விதிகளில் மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டால், நாங்கள் கோரும் ஊதிய உயர்வு தரப்படும் என்று மத்திய அரசும், இந்தியன் வங்கிகள் சங்கமும் தெரிவிக்கின்றன. எந்தச் சூழ்நிலையிலும் எங்களது உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டோம்.

ஊதிய உயர்வு கோரி வரும் 30-ம் தேதி அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 2-ம் தேதி தென்மண்டலத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்