முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பணம் பதுக்கல் பற்றி தகவல் தெரிந்தால் சொல்லலாம்!

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 31 - வெளிநாட்டு வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த கோடீசுவரர்கள் சட்ட விரோதமாக ரூ. 30 லட்சம் கோடி கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பு பணத்தை மீட்க பாஜக அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் ரகசிய கணக்கு வைத்திருக்கும் 627 இந்தியர்களின் பெயர் பட்டியலை ரகசிய உறைகளில் வைத்து நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த பெயர் பட்டியலை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்த சுப்ரீம் கோர்ட் வரும் மார்ச் மாதத்திற்குள் இது தொடர்பான முழு விசாரணையையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தற்போது அனைவரது கவனமும் சிறப்பு புலனாய்வு குழு மீது திரும்பியுள்ளது. நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான இந்த குழு இன்றே தனது பணிகளை தொடங்கியுள்ளது. நீதிபதி எம்.பி. ஷா இது பற்றி கூறுகையில்,

சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் வைத்திருக்கும் 627 இந்தியர்கள் பற்றிய பட்டியல் எங்களுக்கு புதிய ஒன்று அல்ல. ஏற்கனவே இந்த பட்டியலை கடந்த ஜூன் மாதமே மத்திய அரசு எங்களிடம் கொடுத்து விட்டது என்றார். அவர் மேலும் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடுவுக்குள் இது குறித்த எல்லா விசாரணைகளையும் நடத்தி முடித்து விட முடியும் என்று நம்புகிறோம். ஆனால் இது சாதாரணமான வேலை அல்ல. மிக மிக கடினமானது என்றார். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் வைத்து இருப்பவர்கள் பற்றி பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் அது பற்றி எங்களுக்கு தெரிவிக்கலாம் என்று சிறப்பு புலனாய்வு குழு சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தவிர அமலாக்க துறையின் ஒத்துழைப்பையும் சிறப்பு புலனாய்வு குழு கேட்டுள்ளது. வரி கட்டாமல் வெளி நாட்டு வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்கள் பற்றி தகவல்கள் சேகரிக்க புலனாய்வு குழு உறுப்பினர்களுக்கு பிரத்யேக இமெயில் ஐ.டி.கள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இமெயில் ஐ.டி.களில் கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இ மெயில் ஐ.டிக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சிறப்பு புலனாய்வு குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் 627 இந்தியர்களின் கருப்பு பணம் தொடர்பான விசாரணையை தொடங்குவது பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டன. கடந்த 2011ம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் பணம் வைத்திருக்கும் 220 இந்தியர்கள் பற்றி தகவல்களை ஏற்கனவே சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்த 220 இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய அறிக்கையை இன்னும் சில வாரங்களில் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்யவுள்ளது. அப்போது கருப்பு பணத்தை முழுமையாக மத்திய அரசால் மீட்க முடியுமா? என்பது தெரியவரும். ஆனால் கருப்பு பணத்தை எதிர்பார்க்கும் அளவுக்கு மீட்க முடியாது என்று கூறப்படுகிறது. சட்ட சிக்கல்கள் உள்ளதால் இதை சிறப்பு புலனாய்வு குழு எப்படி எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து பிரிவினரிடமும் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்