முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 70% - ஜார்க்கண்ட்டில் 62% வாக்குகள் பதிவு

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ராஞ்சி - ஜார்கண்ட் மற்றும் ஜம்மு- காஷ்மீர் மாநில முதல் கட்ட சட்டசபை தேர்தலில் தீவிரவாதிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி கணிசமான அளவு வாக்குகள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரில் 70% வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 62% அளவுக்கு வாக்குகள் பதிவாகின.
87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு- காஷ்மீரில் முதல் கட்டமாக கார்கில், லடாக் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 15 தொகுகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
இங்கு மொத்தம் 123 வேட்பாளர்கள் களத்தில் நிறுத்தப்பட்டனர். 10 லட்சத்து 51 ஆயிரத்து 642 பேர் வாக்காளர்கள். மொத்தம் ஆயிரத்து 787 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு சட்டசபை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் பிரிவினைவாதிகளின் அழைப்பை நிராகரித்து பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மேலும் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 கண்ணி வெடிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனிடையே பந்திப்போரா என்ற இடத்தில் வெடிகுண்டு வெடித்தது. ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இன்று காலையில் முதல் சில மணி நேரங்களில் 18-20% வாக்குகள் பதிவாகி இருந்தன. பிற்பகலில் இது 50%-க்கும் அதிகமாக அதிகரித்தது. வாக்குப் பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. மொத்தமாக 70% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளனர் ஜம்மு காஷ்மீர் மக்கள்.
பந்திப்போர்- 70.3%; கிஸ்த்வார்- 70%; லே- 57%; கார்கில் 59%; தோடா 76% என வாக்குகள் பதிவாகி இருந்தது.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட்டில், மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகம் உள்ள 13 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப் பதிவு நடந்தது.
மொத்தம் 199 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 939 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இங்கும் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
ஆனால் மாவோயிஸ்டுகளின் அழைப்பை நிராகரித்து பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை வரை மொத்தம் 62% அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தன.
தேர்தலையொட்டி, மத்திய ரிசர்வ் போலீசாருடன், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
முன்னதாக ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் பெருமளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து