முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பண விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - கருப்புப் பண விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று காலை மக்களவை கூடியவுடன் வழக்கமான அலுவல்கள் தொடங்கின. ஆனால், கருப்புப் பண விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். கருப்புப் பணத்துக்கு எதிரான வாசகங்களை எழுதிய கருப்புக் கொடைகளை அவையில் உயர்த்திக் காட்டினர்.
கருப்புப் பணத்தை மீட்டு கொண்டு வாருங்கள் என்ற வாசகம் எழுதப்பட்ட குடைகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் விரித்துக் காட்ட அதற்கு சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவை மரபுகளுக்கு எதிராக செயல்படுவதாக எச்சரித்தார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சபாநாயகர் எச்சரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. அவர்களுடன் சமாஜ்வாதி கட்சியினரும், ஆம் ஆத்மி கட்சியினரும் இணைந்து கொண்டனர்.
அப்போது குறுக்கிட்ட மக்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சி சார்பில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு ஆலோசனை நடத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். அதை ஏற்க மறுத்த சபாநாயகர், கருப்புப் பண விவகாரம் குறித்த விவாதத்திற்கு அவையில் நிச்சயம் அனுமதி அளிக்கப்படும் ஆனால் கேள்வி நேரம் ஒத்திவைக்கப்படமாட்டாது என்றார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் அமளியில் இணைந்து கொண்டனர்.
இதனையடுத்து அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் அறிவித்தார்.
முன்னதாக, இதே விவகாரத்தை முன்நிறுத்தி நாடாளுமன்ற பிரதான வாயிலை முற்றுகையிட்டு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து