முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார்க் நாடுகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய மோடி விருப்பம்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

காட்மண்டு - சார்க் உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலவிவந்த வெறுப்பு மனப்பான்மையும், அவநம்பிக்கையும் நீங்கி நேர்மறை எண்ணங்கள் மேலோங்கி நிற்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
18-வது சார்க் உச்சி மாநாடு நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் நேற்று தொடங்கியது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
"இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறேனோ, அவ்வாறே சார்க் உறுப்பு நாடுகளின் எதிர்காலமும் சிறப்பாக அமைய வேண்டும் என விரும்புகிறேன்.
தெற்காசிய நாடுகள் படிப்படியாக ஒன்றுபட்டு வருகின்றன. சார்க் நாடுகளுக்கு மத்தியில் வெறுப்பு மனப்பான்மையும், அவநம்பிக்கையையுமே நிலவிவந்த சந்தேகம் நீங்கி, நேர்மறை சிந்தனைகள் மேலோங்கி நிற்கின்றன.
இந்தியா- நேபாளம் இடையே எரிசக்தித் துறையில் புதிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல், தற்போது பூடான் நாட்டுடன் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நம் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நாம் வேகமாக செயல்படவில்லை. சார்க் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு மேம்படுத்தப்பட வேண்டும். வர்த்தக நோக்குடன் இந்தியா வரும் சார்க் கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கான தொழில் ரீதியான விசா வழங்கப்படும்.
வர்த்தக மேம்பாட்டிற்கு வர்த்தக உடன்படிக்கைகளை எளிமைப்படுத்துதல் அவசியம். இந்திய சந்தைக்கான பொருள்களை பிற தெற்காசிய நாடுகள் உற்பத்தி செய்ய வேண்டும். உலகம் முழுவதும் அண்டை நாடுகளிடையே நல்ல உறவு இருக்க வேண்டும். பரஸ்பரம் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.
தெற்காசிய நாடுகளில் உள்ள மாணவர்கள் ஆன் - லைன் கல்வி மூலமும் இ-லைப்ரரி மூலமும் இணைந்திருக்க வேண்டும். தெற்காசிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். மருத்துவ உதவிகள் பெற சார்க் நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு உடனடியாக மருத்துவ விசா வழங்கப்படும். தெற்காசிய பிராந்தியத்தில், சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும், என்று மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து