முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதருடன் முதல்வர் சந்திப்பு

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - 2015ம் ஆண்டு மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் சந்திப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வர்த்தக சமூகமும், முதலீட்டாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்..
சென்னை தலைமை செயலகத்தில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா நாட்டு தூதர் பாட்ரிக் சுக்லிங்  நேற்று  முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துடனான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக காணப்படும் வலுவான பொருளாதாரம் மற்றும் விளையாட்டு உறவையும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் தமிழகத்திற்கும் இடையேயான பூலோக ரீதியான சிறப்பை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துரைத்தார்.
மேலும் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறையில் ஆஸ்திரேலியாவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதை குறிப்பிட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறையில், குறிப்பாக தமிழகத்தின் நலனுக்கு உகந்த ஆழ்கடல் மீன்பிடிப்பை அடையாளம் காணவேண்டும், அதன்மூலம் தமிழகத்தில் வசிக்கும் 10 லட்சம் மீனவர்கள் மத்தியில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்து அந்த சமுதாயத்தின் வாழ்வாரத்தை அதிகரிக்க உதவும், மேலும் இந்திய சிறப்பு பொருளாதார மண்டலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். இதுதவிர பால்வளத்துறையில் ஜெயலலிதா துவக்கிய முன்னோடி திட்டமான இலவச கால்நடை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகள் காரணமாக தமிழ்நாடு வலுவான நிலையில் உள்ளது. இந்த துறையில் ஆஸ்திரேலியா தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் பால்வளத்துறையை மேலும் மேம்படுத்த முடியும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
ஆஸ்திரேலியாவானது தமிழக மாணவர்களை கவர்ந்து இழுக்கும் ஒரு இடமாகும். ஆங்கில கல்வி மற்றும் இதர நாடுகளை ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் அங்கு மாணவர்கள் பயில முடியும். இத்தகைய வாய்ப்புகள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கிடைக்க ஏற்பாடுகளை செய்யவேண்டும். ஆஸ்திரேலிய நாடு சமத்துவமான மாண்புகளை கடைப்பிடித்து வருவதால் இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கது என நம்புவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதால் இது ஒத்துழைப்புக்கான நல்ல வாய்ப்பாக அமையும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிர்தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் போன்றவற்றில் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியில் அதிக ஒத்துழைப்புக்கு வாய்ப்புள்ளது என்றும் முதல்வர் அழைப்பு விடுத்தார்.
அதேபோல் கட்டமைப்பு மேம்பாட்டில் கூட்டு செயல்பாட்டுக்கான வாய்ப்புகளை கண்டுபிடிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தமிழகத்தில் மற்றொரு முக்கிய கவனம் செலுத்தும் துறையாகும். கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார் மற்றும் அரசு கூட்டுச்செயல்பாட்டை ஊக்குவித்து வருவதில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலியா மேற்கொள்ளும் நடைமுறைகளை தமிழக அதிகாரிகள் கற்றுக்கொள்ள முடியும்.
இந்த சந்திப்பின்போது ஆஸ்திரேலியா சார்பில் சாலைபாதுகாப்பு முயற்சிகள், மீன்வளத்துறை நிர்வாகம் மற்றும் பால்வளத்துறை போன்றவை  பற்றிய குறிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டது. அதேபோல் திறன் மேம்பாடு, சூரிய எரிசக்தி, அரசு, தனியார் ஒத்துழைப்பு மற்றும் தமிழ்நாடு கட்டமைப்பு நிதிநிர்வாக நிறுவனத்தில் முதலீடுகளை கவர்வது போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சென்னையில் 2015ம் ஆண்டு மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் சந்திப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வர்த்தக சமூகமும், முதலீட்டாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பில் ஆஸ்திரேலிய தூதருடன் சென்னைக்கான ஆஸ்திரேலிய துணை தூதர் சீன் கெல்லி, துணை கவுன்சில் ஜெனரல் ஸ்டார்ட் கேம்பல், வர்த்தக கமிஷனர் கிரேசன் பெர்ரி, துணை கவுன்சல் ராதிகா சத்குனாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் தமிழக அரசின் தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுந்தர், தமிழக அரசின் ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் சி.வி.சங்கர், திட்டம், மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து