முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்திய ஜெயலலிதாவிற்கு நன்றி தீர்மானம்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை - முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி நிரந்தரமாக தண்ணீரை தேக்கி தென் தமிழக மக்களின் ஜீவாதார உரிமையை காத்திட்ட மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அவசர சிறப்பு கூட்டத்தில் நன்றி தெரிவித்து மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அவசர சிறப்பு கூட்டம் மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் கதிரவன், துணை மேயர் கு. திரவியம், மண்டல தலைவர்கள் பெ. சாலைமுத்து, கே. ராஜபாண்டியன், கே. ஜெயவேல் மற்றும் நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த அவசர சிறப்பு கூட்டத்தில் மேயர் ராஜன் செல்லப்பா மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார். அதன் விவரம் வருமாறு:-
தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் மக்களின் முதல்வர் அம்மா தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையான முல்லை பெரியாறு, காவேரி ஆகியவற்றில் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி இழந்த தமிழகத்தின் உரிமைகளை மீட்டு விவசாயிகளின் காவல் தெய்வமாக அம்மா ஒருவர் மட்டுமே விளங்குகிறார். 37 ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்சநீதிமன்றம் வரை சென்று ஆணை பெற்று 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை மக்களின் முதல்வர் அம்மா பெற்றுத் தந்தார். அதன் பின் ஆட்சிக்கு வந்த மைனாரிட்டி திமுக அரசு அதனை செயல்படுத்ததாமல் கிடப்பில் போட்டதால் கேரள அரசு பல்வேறு சதி செயல்களை செய்தது. கடந்த 2011ம் ஆண்டு மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்ற மக்களின் முதல்வர் அம்மா உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை பெற்று தந்தார். இதனால் 2 லட்சத்து 16 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடைவது மட்டுமல்லாமல், மதுரை மாநகராட்சி பகுதிகளில் வாழும் 16 லட்சம் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து தமிழக மக்களின் குல சாமியாக விளங்கும் மக்களின் முதல்வர் அம்மாவிற்கு கோடானுகோடி நன்றியினை இந்த மாமன்ற கூட்டம் தெரிவித்து கொள்கிறது. மீண்டும் விரைவில் தமிழக முதலமைச்சராக அம்மா அரியணையில் அமர்ந்து முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி காட்டுவார் என்று மீண்டும் ஒரு முறை இம்மாமன்றம் இந்த நாளில் மக்களின் முதல்வர் அம்மாவிற்கு கோடானுகோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
தமிழகமே தன் வீடாகவும், தமிழக மக்களை தன் பிள்ளைகளாகவும் நினைத்து தமிழகத்திற்காகவே தன்னையே அர்ப்பணித்து வரும் மக்களின் முதல்வர் அம்மா உலகத்தில் எந்த மூலையிலும் தமிழர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை காக்க தாயாக நின்று வீறுகொண்டு எழுந்து தமிழினத்தை காக்கும் ஒரே தலைவி அம்மா ஒருவர் மட்டும்தான். ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 5 பேர் கடலில் மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் பொய் வழக்கு போட்டு கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை மீட்க மக்களின் முதல்வர் கடுமையான போராட்டங்களை நடத்தியது மட்டுமல்லாமல், மீனவர்களின் குடும்பங்களுக்கு அன்றாட செலவிற்காக மாதந்தோறும் தலா ரூ. 7,500 வழங்க ஆணையிட்டார். அவர்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு 5 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் ரூ. 10 லட்சத்தினை முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து மக்களின் முதல்வர் அம்மா வழங்கினார். அது மட்டுமல்லாமல், 5 மீனவர்களை சிறையில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு ராஜாங்க மற்றும் சட்டரீதியான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட மக்களின் முதல்வர் அம்மா இவ்வழக்கினை தொய்வின்றி நடத்திடும் பொருட்டு 8.2.2013 அன்று கூடுதலாக தலா ரூ. 3 லட்சம் வழங்கியது மட்டுமல்லாமல் 5 மீனவர்களை மீட்க பாரத பிரதமரிடம் 9 முறை கடிதம் எழுதி தொடர் நடவடிக்கை மேற்கொண்டார். அதன் விளைவாக போதை பொருள் கடத்தியதாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் மீது கொழும்பு உயர்நீதிமன்றம் 30.10.2014 அன்று மரண தண்டனை விதித்தது. அந்த அப்பாவி உயிர்களை காப்பாற்ற கொழும்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ரூ. 20 லட்சத்தினை மனிதநேய தலைவி மக்களின் முதல்வர் அம்மா வழங்கினார். இது போன்ற இடைவிடாத அம்மா எடுத்த தொடர் நடவடிக்கையின் பயனாக கடந்த 19.11.2014ம் தேதி இலங்கை அரசால் 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக 5 மீனவர்களை மீட்கவும், அவர்களின் குடும்ப செலவிற்காகவும் மொத்தம் ரூ. 47 லட்சத்து 45 ஆயிரத்தை தாயுள்ளம் கொண்ட அம்மா வழங்கியது மட்டுமல்லாமல் 5 மீனவர்கள் புதிதாக வாழ்க்கையை தொடங்க தற்போது தலா ரூ. 3 லட்சத்தினையும் வழங்கி அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து 5 மீனவ குடும்பங்களின் இல்லங்களில் ஒளிவிளக்கேற்றி வைத்து கருணாநிதியால் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவினை மீட்பதே மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று நீதிமன்றத்தை நாடி வந்ததையும், தொடர்ந்து தமிழர்களின் நலன் காக்கும் அம்மாவுக்கு இந்த மாமன்ற கூட்டம் கோடானுகோடி நன்றியை காணிக்கையாக செலுத்துகிறது.
மேற்கண்ட தீர்மானங்களுக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் ஆர். சுந்தரராஜன் எம்.எல்.ஏ, துணை மேயர் கு. திரவியம், மண்டல தலைவர்கள் பெ. சாலைமுத்து, கே. ஜெயவேல், கே. ராஜபாண்டியன், நிலைக்குழு தலைவர்கள் எஸ்.டி. ஜெயபாலன், முத்துக்கருப்பன், முனியாண்டி, கண்ணகி பாஸ்கரன், கவுன்சிலர் பெ. இந்திராணி, இடது கம்யூனிஸ்டு கவுன்சிலர் செல்லம் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் பேசினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து