முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பறவைக் காய்ச்சல்: நாமக்கல்லில் நோய் தடுப்பு நடவடிக்கை

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

நாமக்கல் - கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கையில், கோழிப்பண்ணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதையடுத்து கேரள அரசு நோய் தொற்று காணப்படும் இடங்களில் உள்ள கோழி, வாத்து ஆகியவற்றை தீயிட்டு அழித்துள்ளன. மேலும், பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு நாள்தோறும் 70 லட்சம் முட்டை, இரண்டு லட்சம் கிலோ கறிக்கோழி வீதம் இறைச்சிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அவ்வாறு அனுப்பப்படும் லாரிகள் மீண்டும் முட்டை ஏற்ற, இறக்க கோழிப்பண்ணைகளுக்கு வரும். அதன்மூலம் தமிழக கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதன்காரணமாக தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கேரளாவில் இருந்து திரும்பும் லாரிகள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்த பின்னரே கோழிப் பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
அதுபோல் கோழிப்பண்ணைகளிலும் நோய் பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சபரிமலை சீஸன் துவக்கம் காரணமாக முட்டை, இறைச்சி நுகர்வு பரவலாக குறைந்துள்ளது. இச்சூழலில் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக நுகர்வு குறைவதுடன், விலை சரியும் அபாயம் ஏற்பட்டதால் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து