முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க கூடாது

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - கல்வி, சுகாதாரம், ஊரக வேலைவாய்ப்பு போன்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்குடன் கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மனிதவள மேம்பாட்டுக்கு தடை போடும் இந்நடவடிக்கை வருத்தமளிக்கிறது.
நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.80,043 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.77,307 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.30,645 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதி ஒதுக்கீடுகள் மிகவும் குறைவானவை என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் ஊரக வளர்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் சுமார் ரூ.20,000 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.11,000 கோடியும், சுகாதாரத்துறைக்கு சுமார் ரூ.7,000 கோடியும் குறைக்கப்பட இருப்பதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் சமூகத் துறைகள் கடுமையாக பாதிக்கப்படும்.
2013-14 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு மொத்தம் ரூ.80,194 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட 46% அதிகம் ஆகும். ஆனால், நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.150 கோடி குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் மேலும் ரூ.20,000 கோடி குறைக்கப்பட்டால் கிராமப்புற வளர்ச்சி அடியோடு பாதிக்கப்படும். இதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியும் ரூ.33,350 கோடியிலிருந்து சுமார் ரூ.9,000 கோடி குறைக்கப்படவுள்ளது. ஏற்கனவே ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதியும் குறைக்கப்பட்டால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வறுமையும், தற்கொலைகளும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
எனவே, கல்வி, சுகாதாரம், ஊரக வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் முடிவை கைவிட்டு, அனைத்து துறைகளும் சம அளவில் வளர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து