முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5ம் தேதி திருவண்ணாமலையில் மகாதீப திருவிழா

புதன்கிழமை, 3 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருவண்ணாமலை - சிவ பெருமானின் அக்னி ஸ்தலமாக போற்றப்படும் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, உலகப் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
7-ஆம் நாளன்று அண்ணாமலையார் மகா தேரோட்டம் நடைபெற்றது. காலை 6.05 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து ஸ்ரீவிநாயகர் தேர் புறப்பட்டது. தொடர்ந்து, காலை 8.45 மணிக்கு முருகர் தேரோட்டம் தொடங்கியது. பிற்பகல் 1 மணிக்கு பெரிய தேர் எனப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர் புறப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீபராசக்தி, ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேர்களின் தேரோட்டம் தொடங்கியது.
விநாயகர் தேர், முருகர் தேர், மகா ரதம் எனப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் நான்கவதாக புறப்பட்ட பராசக்தி அம்மன் தேரை முழுக்க முழுக்க பெண்களும், கடைசியாக புறப்படும் சண்டிகேஸ்வரர் தேரை முழுக்க முழுக்க சிறுவர்-சிறுமியரும் இழுத்துச்சென்றனர்.
தேரடி தெரு, திருவூடல் தெரு, கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வரும் பஞ்ச ரதங்கள் நேற்று மீண்டும் நிலையை வந்தடைந்தன. மாடவீதிகளில் வலம் வந்த தேரினை கண்டு தரிசித்த பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.
அண்ணாமலையார் கோவிலின் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற தேரோட்டத்தைக் காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்திருந்தனர். பக்தர்களின் நலன் கருதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போலீஸாருடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் நண்பர்கள் குழுவினர் சுமார் 750 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபத் திருவிழா 5ஆம் தேதி நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை 3 மணி முதல் 11 மணி வரை கிழக்கு ராஜகோபுரம் வழியாகவும், மாலையில் மகாதீபம் தரிசனம் செய்ய மேற்கு கோபுரம் வழியாகவும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை பக்தர்கள் கிளி கோபுரத்தின் உட்புறம் வந்து செல்ல கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிரிவலப்பாதையில் தேவாரம், திருவாசகம், உள்ளிட்ட இறை வாசகங்கள் அடங்கிய வண்ண பலகைகள் 200 இடங்களில் வைக்கப்படுகிறது. கோவில் உட்புறத்தில் சாமி புறப்பாட்டின்போது பக்தர்கள் கூட்ட நெரிசலில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி இழப்பீடு பெறும் வகையில் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் உரிய காப்பீடு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து