முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நேற்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதனை தரிசித்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடந்த 27ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த தீப விழா நாளை வரை நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி தினமும் காலையிலும், மாலையிலும் தெய்வானையுடன் முருகப் பெருமான் பல்வேறு விதமான வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முக்கிய நிகழ்ச்சியான முருகப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி மாலை கார்த்திகை தேரோட்டமும் அதிவிமர்சையாக நடந்தது. 16கால் மண்டபம் அருகே தேர் அலங்கரிக்கப்பட்டு கோயிலில் இருந்து தெய்வானையுடன் முருகப் பெருமான் புறப்பட்டு அந்த தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேரோட்டத்தில் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரின் வடத்தினை பிடித்து இழுத்தனர். கீழரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரதவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் தேர் ஆடி அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்தது. திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் தேர் பல ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்டு இருந்ததால் புது பொலிவுடன் காணப்பட்டது.
இந்த கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் சன்னிதானத்துக்கு மேலே மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீப மேடையில் நேற்று மாலை 6 மணியளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் ஏற்றுவதற்காக மூன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை தயார் செய்யப்பட்டு அதில் 350 லிட்டர் நெய், 5 கிலோ கற்பூரம், 100 மீட்டர் காடா துணியிலான திரி, ஆகியவற்றை பயன்படுத்தி நேற்று கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் ஏற்றப்பட்டவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தீப தரிசனம் செய்தனர். பின்னர் 16கால் மண்டபம் அருகே நேற்று இரவு கார்த்திகை சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சொக்கப்பனை கொளுத்தி வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து