முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலிண்டர் மானியத்திற்கு ஆதார் அட்டை தேவையில்லை

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் மானியத்திற்கு ஆதார் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான சிறப்பு முகாமும் வருகின்ற 14 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
சமையல் கேஸ் மானியத்திட்டம் தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. நேரடி மானியத்திட்டம் மூலம் சமையல் கேஸ் உள்ளவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் சிலிண்டர் மானியத்தொகை போடப்படும்.
வினியோகஸ்தர்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் முழுத்தொகை கொடுத்து சிலிண்டர்களை பெற வேண்டும். மானிய திட்டத்தில் பலன் பெற நுகர்வோர் தங்களது ஆதார் அட்டை எண்ணை கியாஸ் வினியோகஸ்தரிடமும், வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியிலும், விண்ணப்பப்படிவம் 1, 2 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் 3, 4 ஐ பூர்த்தி செய்து வினியோகிஸ்தர், வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்காக சமையல் எரிவாயு தொடர்புடைய 17 இலக்க குறியீட்டு எண் ஏற்கனவே எஸ்.எம்.எஸ் மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சமையல் கேஸ் நேரடி மானிய திட்டத்தில் சேர நுகர்வோருக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் மானியத்திட்டத்தில் சேர முடியுமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது. இதனை போக்கவும் படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கவும் இந்தியன் ஆயில் நிறுவனம் வருகிற 14 ஆம் தேதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன தலைமை அலுவலகம் அரும்பாக்கம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் 14-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. அரும்பாக்கம், திருவள்ளூரில் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது. ஆதார் அட்டை இல்லாதவர்களும் நேரடி மானியம் பெறும் வகையில் இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
மானியத்திட்டத்தில் சேர வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே இதுவரை இத்திட்டத்தில் சேராதவர்கள் அவசரப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து