முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட்: ஆஸி. 363 ரன்கள் முன்னிலை

வெள்ளிக்கிழமை, 12 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்டு - இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 363 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.
73 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா, உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 32 ரன்களை எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் ஏமாற்றம் அளித்த துவக்க வீரர் ரோஜர்ஸ், இம்முறையும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரரான வார்னர், முதல் இன்னிங்ஸை போலவே, இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 63 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸருடன் அரை சதத்தை எட்டினார்.
வாட்சன் - வார்னர் இணை, பார்ட்னர்ஷிப்பில் 102 ரன்களைக் குவித்தது. வாட்சன் 33 ரன்கள் எடுத்திருந்த போது முகமது ஷமி அவரை வெளியேற்றினார். சென்ற இன்னிங்ஸில் சதமடித்த கிளார்க், 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில், வார்னர் 154 பந்துகளில் சதம் எடுத்தார். ஆனால் தொடர்ந்து நீண்ட நேரம் வார்னர் களத்தில் நிலைக்கவில்லை. கரண் சர்மா வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று வார்னர் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய மார்ஷ், அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார். கரண் சர்மா வீசிய 64-வது ஓவரில் 3 சிக்ஸர், 1 பவுண்டரி உட்பட 24 ரன்களை விளாசினார் மார்ஷ். அடுத்து ரோஹித் சர்மா வீசிய ஓவரில் பந்தை சிக்ஸருக்கு விரட்டும் நோக்கில் அடிக்க, அது கேட்ச் ஆனது. 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து மார்ஷ் வெளியேறினார்.
முதல் இன்னிங்ஸில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டீவன் ஸ்மித் 59 பந்துகளில் அரை சதம் தொட்டார். ஆட்ட நேர முடிவில் ஸ்மித் 52 ரன்களுடனும், ஹாட்டின் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து, 290 ரன்களை எடுத்து, 363 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக 369 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தை இந்தியா துவக்கியது. களத்தில் இருந்த ரோஹித் சர்மாவும், விருத்தமான் சாஹாவும் பொறுமையாகவே ஆடிவந்தனர். ரன் சேர்ப்பை விட விக்கெட்டை பறிகொடுக்காமல் தாக்குப்பிடித்ததே நேற்று பிரதானமாக இருந்தது.
ஆனால் ரோஹித் சர்மா 43 ரன்கள் எடுத்திருந்த போது லயானின் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கரண் சர்மாவும் அடுத்த சில ஓவர்களில் சிட்டில் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். சாஹாவும் (25 ரன்கள்), இஷாந்த் சர்மாவும் (0) ஒரே ஒவரில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
களத்தில் இருந்த முகமது ஷமி, அதிரடியாக ஆடி 3 பவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் அடித்து ஸ்கோர் உயர துணை புரிந்தார். அவரும் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா 444 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. ஆஸ்திரேலியாவின் லயான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்றைய ஆட்டத்தில் 400 ரன்கள் முன்னிலையைக் கடந்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்யுமா அல்லது அதற்கு முன்பாகவே டிக்ளேர் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 5-ஆம் நாள் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்பதால், இந்திய அணி நாளை டிராவை நோக்கியே ஆட்டத்தை எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து