முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிகாந்த் 65-வது பிறந்தநாள்: மோடி - கருணாநிதி - வைகோ வாழ்த்து

சனிக்கிழமை, 13 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - ரஜினிகாந்த் 65-வது பிறந்தநாளை ரசிகர்கள் நேற்று முன் தீனம் உற்சாகமாக கொண்டாடினர். பிரதமர் நரேந்திரமோடி, கருணாநிதி, வைகோ, மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
‘சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்த் நேற்று முன் தீனம் 65-வது பிறந்தநாளை கொண்டாடினார். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு முதல் முறையாக அவரது பிறந்தநாளில் ‘லிங்கா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதிகாலை 1 மணிக்கு ‘லிங்கா’ படத்தின் முதல் காட்சி சென்னை தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் நள்ளிரவு முதலே கடும் குளிரையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தியேட்டர்களில் கூடியிருந்தனர். அதிகாலை 1 மணிக்கு தியேட்டர்களில் கேக் வெட்டி ரஜினி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
4 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் நேரடி படம் வெளியானதால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்தது. இதனால் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டு இருந்தது. தியேட்டர்களில் வைக்கப்பட்டு இருந்த ரஜினி பேனருக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர்.
பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், ரஜினிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நலமுடன், நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டை அவர் தமிழில் பதிவு செய்து இருக்கிறார்.
பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிதின்கட்கரி ஆகியோரும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தொலைபேசி மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் தனது முகநூலில், ‘ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். சூப்பர் ஸ்டார் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை பெற வாழ்த்துவதோடு அவர் தொடர்ந்து இன்னும் பல ஆண்டுகள் தன்னுடைய ரசிகர்களை ஊக்குவித்து மகிழ்விக்க வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் இருந்த தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தமிழகத்தின் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ பார்ப்பதற்கும், பழகுவதற்கும் மிகவும் எளிமையானவர். அவருக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்து, தொடர்ந்து தமிழகத்திற்கு தொண்டாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர்கள் அமிதாப்பச்சன் டுவிட்டரிலும், கமல்ஹாசன் வீடியோ மூலமும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். லிங்கா படம் வெற்றி பெறவும் அவர் வாழ்த்தியுள்ளார். நடிகர் மோகன்லால், தனுஷ், நடிகை அசின் ஆகியோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் பார்த்திபன் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில், ரஜினிகாந்த் வீட்டுக்கு நள்ளிரவு 11.59 மணிக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய், ரஜினிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘எனது ரசிகர்கள் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் சமூக வலைதளங்களில் இல்லை. அதனால் அவரது சார்பில் அவரது ரசிகர்கள் கவனித்து வரும் டுவிட்டர் கணக்கில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். லிங்கா வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் நலமுடன், மகிழ்ச்சியாக வாழ பிரார்த்திக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடந்தது.
திருபோரூர் அருகில் உள்ள அனுமந்தபுரம் வீரபத்ரசுவாமி கோவிலில் மதிய உணவு 65 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலப்பன்சாவடி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து