முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் துறை ஆய்வுக்கு அனுமதிக்கு கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கர்நாடகாவில் மேகதாதுவில் இரண்டு அணைகளைக் கட்டுவதற்கான முனைப்பிலே அந்த அரசு ஈடுபட்டுள்ள இதே நேரத்தில், முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய வன விலங்குகள் வாரியமானது அனுமதி அளித்துள்ளது என்ற வேதனை தரும் செய்தி வந்துள்ளது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பல ஆண்டுக்காலமாக கேரள அரசு எப்படியாவது அதன் முக்கியத்துவத்தையும், தேவையையும் குறைத்திடும் வகையில் புதிதாக மற்றொரு அணை கட்ட வேண்டுமென்றோ அல்லது முல்லைப் பெரியாறு அணை பலமாக இல்லை என்றோ ஏதோ ஒரு காரணத்தைக் கூறி பிரச்சினையைக் கிளப்பியே வருகிறது.
ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் கேரள அரசு புதிதாக அணை கட்டுவதற்கு ஏற்கனவே கடந்த ஆண்டே தடை விதித்துள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும், அதற்கு முன்பே அமைக்கப்பட்ட மிட்டல் குழுவும் முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என்பதில் உறுதியாகக் கருத்து தெரிவித்திருக்கின்றன.
இந்த நிலையில் மத்திய அரசின் தேசிய வன விலங்குகள் வாரியம் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி அளித்திருப்பது தமிழகத்திற்கு பாதகம் விளைவித்திடும் செய்தி மட்டுமல்லாமல் உச்சநீதிமன்ற உத்தரவையே புறக்கணிக்கும் செயலாகவும் அமைந்துவிடும்.
கேரள அரசுக்கு மத்திய அரசு இவ்வாறு தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் அனுமதி கொடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அதுபோலவே பாம்பாற்றின் குறுக்கேயும் கேரள அரசு அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணியை மேற்கொண்ட மத்திய புவியியல் துறை வல்லுநர்கள் ஒப்புதல் அளித்திருப்பதாக கேரள அரசின் மேற்பார்வைப் பொறியாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
அவர் மேலும் கூறும்போது, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட செய்திகள் வரும்போதெல்லாம் தமிழக அரசின் சார்பில் முதல்–அமைச்சராக இருப்பவர்கள் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு, அத்துடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாகக் கருதி விடுகிறார்கள். தமிழ் நாட்டைப் பாதிக்கும் இப்படிப்பட்ட பிரச்சினைகளில் தமிழக அனைத்து அரசியல் கட்சிகளின் குழுவோடு, முதல்–அமைச்சரே நேரில் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துக் கூறினால் மட்டும் தான் நல்ல விளைவுகள் ஏற்படும். எனவே தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு உடனடியாக டெல்லி சென்று தமிழ் நாட்டின் கருத்துகளை அங்கே எதிரொலித்து நல்ல முடிவு காண வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து