முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று சனிப்பெயர்ச்சி விழா: துலாமிலிருந்து - விருச்சிகத்திற்கு பிரவேசிக்கிறார்

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

காரைக்கால் - ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதே பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எல்லா கிரகங்களும் பெயர்ச்சி அடைகிறது என்றாலும் சனிப்பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சியைத் தான் நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம். இரண்டு பெயர்ச்சிக்கும் கோயில்களுக்கு சென்று வழிபட்டு நம் ராசிக்குரிய பலன்களை எதிர்பார்த்து அதன்படி நடந்து கொள்கிறோம்.
சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அந்த முப்பது ஆண்டுகளையும் 12 ராசிகளுக்கும் சராசரியாக பிரித்தால் இரண்டரை ஆண்டுகள் வரும். அப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்தலையே சனிப்பெயர்ச்சி என்கிறோம்.
தற்பொழுது துலாம் ராசியில் உச்சம் பெற்ற கிரகமாக இருந்து வந்த சனீஸ்வர பகவான் விருச்சிக ராசிக்கு பழமையான திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நவ.2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.54 மணிக்கு இடம் பெயர்ந்தார். இந்த சனிப்பெயர்ச்சியை தமிழ்நாட்டில் யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. கேரள மாநிலம் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே அந்த சனிப் பெயர்ச்சியை கணக்கில் கொண்டார்கள்.
தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆன்மிக விழாவாக இன்று 16-ம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சியைத்தான் பக்தர்களும், ஜோதிட வல்லுநர்களும் குறிப்பிடுகின்றனர். மிகப்பழமையான பஞ்சாங்கமாக கருதப்படும் வாக்கிய பஞ்சாங்க கணித முறைப்படி இன்றுதான் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. அதன்படி வரும் மார்கழி மாதம் 1-ம் தேதி (டிசம்பர் 16) பிற்பகல் 2.43 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கிறார்.
தமிழ்நாட்டின் மத்திய மண்டலப் பகுதிகள் மற்றும் புகழ்பெற்ற திரூவாரூர் அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு, காரைக்காலின் திருநள்ளாறு ஆகிய தலங்களில் உள்ள சனீஸ்வர பகவான் ஆலயங்களில் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனிபகவான் சரியாக இன்று பகல் 2.43 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது சனீ ஸ்வரன் கோவிலில் மகாதீபாரதனை காண்பிக்கப்படும். அதை தரிசனம் செய்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அந்த இடத்தில் கூடுவார்கள். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 100 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல
இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நான்கு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு கோவிலில் நளன்குளம் உள்ளது. இந்த குளத்தில் புனித நீராடி விட்டு சனி பகவானை தரிசித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவார்கள். ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ப க்தர்கள் வரை நீராடும் வகையில் பிரம்மாண்டமான முறையில் நளன்குளம் அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறில் 2 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூரில் இருந்து பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக பல இடங்களில் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மிக அதிகமானதும் நல்லதுமான பலன்களை பெறப் போவது மிதுனம், கன்னி மற்றும் மகரம் ஆகிய ராசிகள். சனிபகவான் தன்னுடைய ஆறாமிட சஞ்சாரத்தின் மூலம் மிதுன ராசிக்கும் மூன்றாமிட சஞ்சாரத்தின் மூலம் கன்னி ராசிக்கும் மற்றும் பதினொறாமிட சஞ்சாரத்தின் மூலம் மகர ராசிக்கும் நற்பலன்களை வழங்க உள்ளார். கடகம், கும்பம் மற்றும் மீன ராசிகளுக்கு மத்திம பலன்களையும் வழங்க உள்ளார். அதே சமயம், மேஷம்,ரிஷபம் சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேஷத்துக்கு அஷ்டம சனி, ரிஷபத்துக்கு கண்ட சனியும், சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனியும், விருச்சிகத்துக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியும், தனுசுக்கு ஏழரைச் சனியில் விரய சனியுமாக அமைவதால் கெடு பலன்களுக்கான வாய்ப்பு இருக்கிறது.
இந்த சனிப்பெயர்ச்சிக்கு ஆலயம் சென்று தொழுவதே சாலவும் நன்று. குறிப்பாக திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன் அருளாட்சி செய்கிறார். இங்கு சென்று ஒரு நாள் தங்கி வழிபடுவது நல்லது. சனிப் பெயர்ச்சிக்கு பல லட்சம் பேர் வழிபட வருவதால் இன்று செல்ல முடியாதவர்கள் பதினைந்து நாள் முன்போ, பின்போகூட செல்லலாம். திருக்கொள்ளிக்காட்டில் உள்ள சனீஸ்வரர் பொங்குசனீஸ்வரராக அருள் பாலிக்கிறார்.
மதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரிலும் சனீசுவரர் மிக கீர்த்தி பெற்றவராக விளங்குகிறார். கல்தூண் போன்ற உருவத்தில சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் 'வட திருநள்ளாறு' என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தருகிறார் சனீஸ்வரர். மும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார். இந்த சனி பகவானை ஆண்கள் மட்டுமே சுத்தமாகக் குளித்து ஆலயத்திலேயே கிடைக்கும் ஆடை அணிந்து பூசிக்கலாம். பெண்கள் விலகி நின்றே தரிசிக்க வேண்டும்.
சனிக்கு உகந்த தானியம் எள். அதனால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஆகியவை கொண்டு அவரை வழிபடலாம். சனிக்கு உகந்தவர்கள் ஆஞ்சநேயர், விநாயகர், பெருமாள். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். "உன் பக்தர்களை அண்ட மாட்டேன்" என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராணச் செய்தி ஒன்று கூறுகிறது. சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகுந்த மகிமை வாய்ந்தது. அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.சனி பகவானின் வாகனம் காக்கை. தினமும் காக்கைக்கு சாதம் வைப்பதன் மூலம் சனியின் பாதிப்பு குறையும்.
ஏழரைச் சனி என்பது ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகள் வீதம் ஒரு ராசி, அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளில் சனி இருக்கும் ஏழரை ஆண்டுகள் என்பதைத்தான் ஏழரைச்சனி என்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து