முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: 132 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

பெஷாவர் - பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளிக்குள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 132 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 125 பேர் படுகாயமடைந்துள்ளனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பொதுமக்களுக்கான பள்ளிக் கூடத்துக்குள் நேற்று முற்பகல் 6 தலிபான் தீவிரவாதிகள் திடீரென உள்ளே நுழைந்தனர். பாகிஸ்தான் ராணுவ சீருடையுடன் உள்ளே நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் முதலில் பள்ளி வாகனத்துக்கு தீ வைத்தனர்.
அப்போது பள்ளிக்கூடத்தில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. வகுப்பறைகளுக்குள் அதிரடியாக நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக குழந்தைகளை சுட்டுப் படுகொலை செய்யத் தொடங்கினர். தேர்வு எழுதிக் கொண்டிருந்த பள்ளிக் குழந்தைகள் பலரையும் துப்பாக்கி முனையில் கலையரங்கம் ஒன்றில் தலிபான்கள் பிணைக் கைதிகளாக சிறை வைத்தனர்.
தலிபான்களிடம் 500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பிணைக் கைதிகளாக சிக்கினர். அப்போது பள்ளிக் குழந்தைகளை வரிசையாக நிற்க வைத்தும் தலிபான்கள் சுட்டுப் படுகொலை செய்து வெறியாட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 132 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் அங்கு குவிக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் தலிபான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது தீவிரவாதிகளில் ஒருவன் உடலோடு கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய அந்த இடமே பயங்கர போர்க்களமானது.
இந்த மோதலில் மொத்தம் 125 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெஷாவரில் உள்ள மருத்துவமனையில் அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது. எஞ்சிய 5 தீவிரவாதிகளுடன் பல மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. ஒவ்வொரு தீவிரவாதியாக கொல்லப்பட்ட நிலையில் 5வது தீவிரவாதி மாலை 4 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த தீவிரவாதிகள் அனைவரும் தற்கொலைப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சிட்னியில் 17 பேரை பிணைக் கைதியாக பிடித்து வைத்த ஈரான் தீவிரவாதியின் செயலால் இருவர் உயிரிழந்த பதற்றம் அடங்குவதற்குள் நூற்றுக்கணக்கான பள்ளி குழந்தைகளை தலிபான் தீவிரவாத கும்பல் படுகொலை செய்திருப்பது உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான்கள் அமைப்பு அறிவித்துள்ளது. வடக்கு வஜ்ரிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டதற்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை நடத்தியதாக தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு கூறியுள்ளது.
இந்த கொடூர செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதே போல் உலக தலைவர்கள் பலரும் இந்த வெறியாட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் உலக மக்களையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து