முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கு: அதிகாரிகளின் விசாரணை நடவடிக்கைகளை சிபிஐ இயக்குனரே கவனிப்பார்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகளின் விசாரணை நடவடிக்கைகளை சிபிஐ இயக்குனர் அனில்குமார் சின்ஹாவே கவனிப்பார் என்று சுப்ரீம் கோர்ட் உத்த ரவிட்டுள்ளது.
இதற்கு முன்பு சிபிஐ இயக்குனராக இருந்த ரஞ்சித் சின்ஹா, 2 ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிரதிநிதிகளை தனிப்பட்ட முறையில் அவரது இல்லத்தில் பல முறை சந்தித்து பேசியதாக சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மேலும் தனது புகாருக்கு ஆதாரமாக ரஞ்சித் சின்ஹா வீட்டு பார்வையாளர் குறிப்பேடு ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்தார்.
இதை சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஆய்வு செய்த சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், பிரசாந்த் பூஷணின் புகாருக்கு முகாந்திரம் உள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து 2 ஜி அலைக்கற்றை விசாரணை நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணியில் இருந்து ரஞ்சித் சின்ஹா விலகி இருக்க வேண்டும். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள உயரதிகாரி இந்த வழக்கு விசாரணை பணிகளை மேற்பார்வையிட வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கடந்த 2ம் தேதியுடன் ரஞ்சித் சின்ஹா பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து சிபிஐ சிறப்பு இயக்குனராக இருந்த அனில்குமார் சின்ஹா புதிய சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்பான பிரசாந்த் பூசணின் மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி சிபிஐ இயக்குனராக ஏ.கே. சின்ஹா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே முந்தைய உத்தரவை மாற்றி இயக்குனரே இந்த வழக்கு விசாரணையை மேற்பார்வையிட அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தத்து, 2 ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்புடைய அதிகாரிகளின் விசாரணை நடவடிக்கைகளை சிபிஐ இயக்குனரே இனி கவனிப்பார். அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் ஏற்கனவே கடைப்பிடித்து வந்த நடைமுறையின்படி புதிய சிபிஐ இயக்குனரிடம் விசாரணை விளக்கத்தை தெரிவித்து அறிவுரைகளை பெறலாம் என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து