முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகு நிலையங்கள் - மசாஜ் மையங்களை நெறிப்படுத்த புதிய சட்டம்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - அழகு நிலையங்கள், மசாஜ் மையங்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு வழிமுறைகளையும், சட்டத்தையும் இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடிப்படை ஆதாரமின்றி மசாஜ் தொழிலில் போலீஸார் குறுக்கீடு செய்யக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மசாஜ் மையங்கள், அழகு நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த மையங்களில் சோதனை என்ற பெயரில் போலீஸார் அடிக்கடி தொந்தரவு செய்கின்றனர்.
அதனால், தங்களது தொழிலில் போலீஸார் குறுக்கிடுவதைத் தடுக்கவும், அடிக்கடி சோதனை செய்வதை நிறுத்தவும் உத்தரவிடக் கோரி எஸ்.ரங்கராஜ் உள்பட 23 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு புதன்கிழமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் அவர்களது தொழிலை சட்டப்படி மேற்கொள்கின்றனரா அல்லது இல்லையா என்பதை கண்டறிவது அவசியமானது.
மேலும், இந்தத் தொழிலுக்கு சட்டத்த்தில் தடை உள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கவில்லை. சட்டத்தை மீறி அவர்கள் செயல்படுகின்றனர் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
இவர்கள் உரிமம் பெற வேண்டும் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அழுகு நிலையத்துக்கான உரிமம் பெற்று மனுதாரர்கள் தங்களது தொழிலை மேற்கொள்கின்றனர்
சென்னையில் உள்ள 225 மையங்களில் 17 மையங்களில் மட்டும்தான் விபச்சாரப் பிரிவின் கீழ் சோதனை செய்யதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், சட்ட விதிகளுக்குள்பட்டு இந்த மையங்களில் சோதனை நடத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. அதற்கான ஆவணங்களையும் போலீஸார் தாக்கல் செய்யவில்லை.
மசாஜ் மையங்கள், அழகு நிலையங்கள் போன்றவை தொடர்பாக வெளிநாடுகளில் சட்டங்கள் உள்ளன. அதைப் போன்று இங்கு எந்த சட்டமும் இல்லை. அதனால், அழகு நிலையங்கள், மசாஜ் மையங்களை நெறிப்படுத்த புதிய சட்டங்கள், வழிமுறைகள் இயற்றப்பட வேண்டும்.
சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யோகா போன்ற இயற்கை முறை வைத்தியங்களில் இந்தியா நிபுணத்துவம் பெற்றது. இங்கு அதிகமான நிபுணர்கள் இயற்கை வைத்தியங்களில் உள்ளனர்.
மசாஜ் மையங்களை சிலர் தவறாகப் பயன்படுத்துவதால் அந்தத் தொழிலை கேவலமாகப் பார்க்கக்கூடாது. இதை ஒழுங்படுத்தினால் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அதனால், எந்த அடிப்படை ஆதாரம் இல்லாமல் மசாஜ் மையங்கள், அழகு நிலையங்களின் செயல்பாடுகளில் போலீஸார் குறுக்கீடு செய்யக் கூடாது. அவ்வாறு சோதனை செய்வதற்கான முகாந்திரம் இருந்தால், சட்ட விதிப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
மேலும், வெளிநாடுகளைப் போன்று இந்தத் தொழிலை நெறிப்படுத்த தமிழக அரசு புதிய சட்டமும், வழிமுறைகளையும் இயற்ற வேண்டும். இது தொடர்பான அறிக்கையை மார்ச் 31-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து