முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை 20–ந்தேதி வரை 3 நாட்களுக்கு பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், 24–ந்தேதி மழை அளவு அதிகரிக்கும் என்றும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டு காலமாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் சரியாக பெய்யவில்லை. சராசரி மழையை விட கடந்த ஆண்டு 33 சதவீதம் குறைவான மழையே தமிழகத்தில் பெய்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் டிசம்பர் 10–ந் தேதி வரை சராசரி மழை பதிவாகியுள்ளது.

அக்டோபர் 1–ந் தேதி முதல் டிசம்பர் 10–ந் தேதி வரை தமிழகத்தில் சராசரியாக 397.1 மி.மீ மழை பெய்ய வேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் 10–ந் தேதி வரை 370.5 மி.மீ மழை பெய்துள்ளது. இது 7 சதவீதம் குறைவாகும். ஆனாலும் வானிலை ஆய்வு மைய கணக்கின் படி இது சராசரியான மழையாகும்.

புதுவையில் சராசரியாக 782.9 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 678.6 மி.மீ மழை பெய்துள்ளது. இது 14 சதவீதம் குறைவான மழையாகும். ஆனால் இதுவும் சராசரி அளவு மழை என்றே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் சராசரியை விட கூடுதல் மழை பெய்துள்ளது. திருநெல்வேலியில் 406 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 709.3 மி.மீ மழை பெய்துள்ளது. இது 75 சதவீதம் கூடுதலாகும்.

தூத்துக்குடியில் 375.6 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 525.2 மி.மீ மழை பெய்துள்ளது. இது 40 சதவீதம் கூடுதலாகும்.

ராமநாதபுரத்தில் 427.7 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 545.3 மி.மீ மழை பெய்துள்ளது. இது 28 சதவீதம் கூடுதலாகும். ஈரோட்டில் 296 மி.மீ. பெய்ய வேண்டும். ஆனால் 379.5 மி.மீ மழை பெய்துள்ளது. இது 28 சதவீதம் கூடுதலாகும்.

அரியலூர், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சராசரியை விட குறைவான மழையே பெய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து