முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேஸ் சிலிண்டர் மானியம் பெற ஒரே ஒரு விண்ணப்பம் போதும்

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - கேஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்கு இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 21ம் தேதி இதற்கான சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இந்திய எண்ணெய் நிறுவனத்தின் செயல் இயக்குனர் யு.வி. மன்னூர் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
கேஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம் நாடு முழுவதும் நவம்பர் மாதம் 1 5ம் தேதி 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தில் சேர்ந்து வங்கி கணக்கு மூலம் மானிய தொகையை பெறும் நுகர்வோர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
அதே நேரத்தில் மானிய தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதை www.myipg.in என்ற இணையதளம் மூலம் நுகர்வோர் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். நாடு முழுவதும் ஜனவரி 1ம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. நேரடி மானிய திட்டத்தில் நுகர்வோரை இணைப்பதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தில் தற்போது நுகர்வோர் இணைவதற்காக வழங்கப்படும் பல்வேறு படிவங்களை பூர்த்தி செய்து அளிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதை கருத்தில் கொண்டு அனைத்து விவரங்களையும் ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வழங்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத நுகர்வோர் இனி தனித்தனியாக விண்ணப்ப படிவங்களை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் அட்டை இருப்பவர்கள், ஆதார் அட்டை இல்லாதவர்கள், மானியம் பெற விரும்பாதவர்கள் என அனைவரும் ஒரே விண்ணப்பத்தில் அனைத்து விவரங்களையும் தெரிவிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விண்ணப்பம் எரிவாயு விநியோகஸ்தரிடமும் இணையதளத்திலும் கிடைக்கும்.
இதற்கென எந்தவித கட்டணமும் கிடையாது. விண்ணப்பங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் விநியோகஸ்தர்கள் பற்றிய முழு விவரங்களுடன் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
ஆதார் எண் இல்லாதவர்களும் நேரடி மானியம் பெறும் வகையில் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆதார் எண் இல்லாத நுகர்வோர்கள் வங்கி கணக்கு மூலம் மானிய தொகையை நேரடியாக பெறலாம். இருப்பினும் அந்த நுகர்வோர் ஆதார் எண் கிடைக்கப் பெற்றவுடன் அதை பயன்படுத்தி மானியத்தை பெறுவது அவசியம். எனவே ஆதார் எண் கிடைத்தவுடன் தெரியப்படுத்த வேண்டியது கட்டாயம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து