முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துத்துவ திட்டத்தை பாஜக அரசு அமல்படுத்துவதாக குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - இந்துத்துவ கொள்கை திட்டங்களை மத்திய பாஜக அரசு அமல்படுத்தி வருவவதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும் மத்திய அரசு மக்களவையை தவறாக வழிநடத்துவதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கிறிஸ்துமஸ் தினமான வரும் 25ம் தேதி பள்ளி, கல்லூரிகளில் நல்லாட்சி தினம் கடைப்பிடிக்குமாறு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு சர்ச்சையை எழுப்பியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் மக்களவையில் மீண்டும் பிரச்சினையை எழுப்பின. அப்போது மத்திய அரசு சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை காட்டி காங்கிரஸ் உறுப்பினர் வேணுகோபால் பேசுகையில்,
கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளிகள் செயல்படாது என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்திருந்தது. ஆனால் நல்லாட்சி தினத்தையொட்டி வரும் 2 5ம் தேதி பல்வேறு போட்டிகளை நடத்துமாறு பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதே போல் பள்ளிகளில் நல்லாட்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டதற்கு சான்றாக புகைப்படம் வீடியோ ஆதாரங்களை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தின விடுமுறை நாளில் பள்ளிகள் செயல்படாமல் எப்படி புகைப்பட ஆதாரங்களை அரசுக்கு அனுப்ப முடியும். ஆனால் மக்களவையில் முரணான கருத்துக்களை அரசு கூறி வருகிறது. இது அவையை தவறாக வழி நடத்துவதாகும். இந்துத்துவ திட்டங்களை அமல்படுத்த அரசு முயற்சிக்கிறது என்றார். இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் வெங்கையா நாயுடு பதிலளிக்கையில்,
எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் நாட்டையே தவறாக வழிநடத்துவதை போல் உள்ளன. இது மிகவும் உணர்வுபூர்மான விஷயம். காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதியன்று பள்ளி, கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை குறிப்பிட்ட வெங்கையா நாயுடு இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோரை விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து