முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிக்கு ஜாமீன் வழங்குவதா? ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:

பெஷவாரில் உள்ள பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 132 குழந்தைகள் உள்பட 148 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நடைபெற்று 2 நாட்களான நிலையில், மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜகியுர் ரஹ்மான் லக்வி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்.

பாகிஸ்தான் அரசுத் தரப்பில் இந்த வழக்கை நடத்துவதில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாகவே இவ்வாறு நடந்துள்ளது என கருதுகிறேன். அல்லது, வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியாவில் தொடரப்பட்ட வழக்கில் விரைவாக விசாரணை முடிக்கப்பட்டு, தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார். ஆனால், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களை இந்திய அரசு அளித்துள்ளது. எனினும், விசாரணை மிகவும் தாமதமாக நடைபெறுகிறது.

தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். எனவே, லக்வி ஜாமீனுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து