முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்கு - சேவை வரி மசோதா: ஒருமித்த கருத்தை ஏற்படுத்தக்கோரி கடிதம்

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா வலியுறுத்தியபடி சரக்கு, சேவை வரி மசோதாவில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் இதுதொடர்பாக மாநில நிதியமைச்சர்கள் குழுவை அமைத்து குறைகளை போக்கவேண்டும் என்றும் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 இதுகுறித்து முதலமைச்சர் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

எனது மதிப்பிற்குரிய தலைவர் அம்மா(ஜெயலலிதா) சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மசோதாவால் மாநிலங்களின் நிதி தன்னாட்சியில் ஏற்படும் விளைவுகள் மற்றும் இந்த வரிமுறையால்உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அடிக்கடி சுட்டிக்காட்டி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.

எனவே,இந்த மசோதா தொடர்பான அரசியல் சட்ட திருத்தம் செய்வதற்கு முன் மத்திய அரசு ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக ஜிஎஸ்டி தொடர்பான,இழப்பீடு வழங்கும் காலம்,வருவாய் விகிதம், வரிவிதிப்பு முறை, ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் வணிக பொருட்கள் ஆகியவற்றை தெளிவுப்படுத்த வேண்டும்.அப்போதுதான், மாநிலங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு தொடர்பான அச்சம் போக்கப்படும்.

இந்த விஷயத்தில் இழப்பீடு வழங்கப்படும் விதம் தொடர்பாக அரசியல் சட்டத்தில் 120வது சட்டத்திருத்த மசோதா குறித்து மாநிலங்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு இருப்பதாக நான் அறிகிறேன். என்றாலும் கூட, மாநிலங்களுக்கு உள்ள இன்னும் ஏராளமான குறைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது.இந்த நிலையில், ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு முன்பே இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது. வரைவு மசோதாவில் ஜிஎஸ்டி (சேவை சரக்கு வரி) கவுன்சில் வாயிலாக கூடுதல்வரி செஸ் வரி,விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் ஆகியவை பற்றி பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயத்தை தெளிவுப்படுத்த வேண்டுமானால், வருவாயில் பாரபட்சமற்ற நிலை மற்றும் இரட்டை கட்டுப்பாடு, இழப்பீடு வழங்கும் முறை ஆகியவை குறித்து அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் மூலம் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில்அமைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட இந்த அமைப்பின் மூலம் மாநிலங்களில் நிதி சுதந்திரம் மற்றும் நிதி தொடர்பான விஷயங்களை விட்டுக்கொடுப்பதாக அமைந்து விடும். மேலும் இந்த கவுன்சிலில் மத்திய அரசுக்கு உள்ள வீட்டோ அதிகாரம் மற்றும் மாநிலங்களிடையே ஏற்படும் வேறுபாடற்ற தன்மை ஆகியவற்றுக்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவித்து இருக்கிறோம். எங்களது ஆட்சேபங்களுக்கு இடையே பெட்ரோலிய பொருட்களான பெட்ரோல்,டீசல் போன்றவை தற்போது மாநிலங்களில் வாட் வரிக்கு அப்பாற்பட்டு ஜிஎஸ்டி மசோதாவுக்கு உட்பட்டதாக்கி இருக்கிறது.இருப்பினும் இந்த வரி விதிப்பு எப்போது அமுலுக்கு வரும் என்பது ஜிஎஸ்டி கவுன்சிலை பொறுத்ததாகும்.

பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிவசூல் மற்றும் குறுகிய கால வினியோகம், விற்பனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால்,இந்த பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரும்போது, மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

மேலும், எரிசக்தி நுகர்வு விஷயத்தில் குறிக்கோளை எட்டமுடியாத நிலை ஏற்படும். எனவே, பெட்ரோலிய பொருட்களை முற்றிலுமாக ஜிஎஸ்டிக்கு அப்பாற்பட்டதாக்க வேண்டும்.

மேலும், உத்தேசிக்கப்பட்ட மசோதாவில் புகையிலை பொருட்கள் மீது மாநிலங்கள் விதிக்கும் லெவி வரி சேர்க்கப்படவில்லை. அவை மத்திய அரசின் கீழ் வருகிறது.எனவே, இந்த வரிவிதிப்பு முறையில் மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்.

இந்த மசோதாவில் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் காலம் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைப்படி 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டு காலம் முதல் 3 ஆண்டுகளுக்கு 100 சதவீதமும், 4வது ஆண்டில் 75 சதவீதமும், 5வது ஆண்டில் 50 சதவீதமும் இருக்கும் என்று தெரிகிறது. இது எங்களுக்கு ஏற்புடையது அல்ல.மாநிலங்களுக்கு நிரந்தரமாக ஏற்படும் இழப்பை கருத்தில் கொண்டு 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக 100 சதவிகித இழப்பீடு தரவேண்டும்.

கடந்த காலங்களில் வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டபோதும், விற்பனை வரி குறைக்கப்பட்டபோது, மாநிலங்களுக்கு அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில்ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி அமுல்படுத்தப்பட்டால் பெரும் இழப்பு ஏற்படும்.

எனவே, மாநிலங்கள் ஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி போன்றவற்றில் மாநிலங்களிடையிலான 4 சதவிகிதத்தை இழப்பீட்டு தொகையாக பெற அனுமதிக்கப்படவேண்டும்.மேலும் மற்றொரு முரண்பாடாக, இந்த மசோதாவில் மாநிலங்களுக்கிடையில் ஆன 2ஆண்டுகளுக்கு ஒரு சதவிகித விற்பனை வரி பெருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு கூடுதலாக ஒரு சதவிகித லெவி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுஎங்களுக்கு ஏற்புடையது அல்ல. இந்தவிஷயத்தில் மாநிலங்களுக்கு 4 சதவிகிதம் அனுமதி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.இறுதியாக, ஜிஎஸ்டி தொடர்பான அரசியல் சட்ட திருத்த மசோதாவை அமுல்படுத்துவதற்குமுன்,வரி விகிதம் போன்ற விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவேண்டும்.மேலும், மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய அதிகாரம்அளிக்கப்பட்ட குழுவை அமைத்து ஒருமித்த கருத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த விஷயத்தில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் முன், மாநிலங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தை போக்க, உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்கவேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து