முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்வையற்ற மாணவர்களுக்கு சிறப்பு மென்பொருளுடன் இலவச லேப்டாப்கள்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் சிறப்பு மென்பொருள் பொருத்திய மடிக்கணினிகளை பார்வையற்ற மாணவர்களுக்கு சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி வழங்கினார்.

சென்னை, அடையாறு, காந்தி நகரிலுள்ள செயின்ட் லூயிஸ் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் மற்றும் காதொலி கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி அ கலந்து கொண்டு, மேல்நிலைக் கல்வி பயிலும் 19 பார்வையற்ற மாணவர்களுக்கு விலையில்லா சிறப்பு மென்பொருள் பொருத்திய மடிக்கணினிகளையும், 45 வாய் பேசாத மற்றும் காதுகேளாத மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிகளையும், 30 வாய் பேசாத மற்றும் காதுகேளாத பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு காதொலி கருவிகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,

 " 2011 ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன், மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தங்களது கல்வியறிவை மேலும் வளர்த்துக் கொள்ளவும், உலக நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஏதுவாக விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்கள். மேல்நிலைக் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பார்வையற்ற மாணவ, மாணவியரும் மற்ற மாணவர்களைப் போல மடிக்கணினிகளை பயன்படுத்த ஏதுவாக "ஜாஸ்" என்னும் சிறப்பு மென்பொருள் பொருத்தப்பட்டு வழங்கப்படுகிறது. மனதில் நம்பிக்கையோடு பயின்று வரும் உங்களுக்கு இந்த மடிக்கணிகள் ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். இந்தியாவிலே மாணவ, மாணவியருக்கு இதுபோன்ற விலையில்லா மடிக்கணினி வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்.

தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால், முடநீக்கு சாதனங்கள், காதொலி கருவி, இரு சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், கல்வி உதவித் தொகை, கடும் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு உதவித் தொகை, இலவச பேருந்து பயண சலுகை அட்டை, சுயதொழில் தொடங்க மானியத்துடன் வங்கிக் கடன் என பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன" என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தமிழ்நாடு ஜவுளிக் கழகத் தலைவர் விருகை வி.என்.ரவி, சட்டமன்ற உறுப்பினர். எம்.கே. அசோக், மாநகராட்சி உறுப்பினர் கோகிலா கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கா.ஜேஸ்மின், பள்ளியின் தாளாளர் ஐ. ஜான் சேவியர், மான்போர்ட் கல்லூரியின் தாளாளர் சேவியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து