முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதி கட்ட தேர்தல்: ஜார்கண்டில் 70 % - காஷ்மீரில் 55 % வாக்குகள் பதிவு

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ராஞ்சி - ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கான இறுதிக் கட்டமாக நேற்று நடைபெற்ற தேர்தலில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 70 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 55 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஏற்கனவே 67 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்து விட்டது. இதில் எதிர்பார்த்ததை விட அதிக சதவீதம் வாக்குகள் பதிவானது. மீதமுள்ள 20 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜம்மு, ரஜவுரி, கதுவா ஆகிய 3 மாவட்டங்களில் அடங்கியுள்ள இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

துணை முதல்வர் தாரா சந்த், அமைச்சர்கள் சாம்லால் சர்மா, ரமண் பல்லா, மனோகர் லால் சர்மா, அஜய் சதோத்ரா, முன்னாள் எம்.பி., அமைச்சர்கள் லால் சிங், தலிப் ஹுசேன், ஜிதேந்திர பாபு சிங், சட்டசபை முன்னாள் துணைத் தலைவர் ஹைதர் மாலிக் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்கள் ஆவர். கடைசி கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 366 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 28 ஆயிரத்து 904 வாக்காளர்கள் உள்ளனர்.

ஜம்மு மாவட்டம், ஆர்னியா பகுதியில் கடந்த மாதம் 27-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர். இதனால் ஜம்மு பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில், போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 400 படைப்பிரிவு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். பாகிஸ்தானையொட்டிய எல்லையோர பகுதிகளிலும், தேர்தலையொட்டி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. நேற்றைய தேர்தலில் தீவிரவாத அச்சுறுத்தலையும் மீறி மொத்தம் 55 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மொத்தம் 81 சட்டசபை தொகுதிகளில் ஏற்கனவே 65 இடங்களுக்கு தேர்தல் நடந்து விட்டது. இந்த நிலையில் மீதமுள்ள 16 தொகுதிகளுக்கு இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் போட்டியிடும் 2ஆவது தொகுதியான தும்காவும் ஒன்றாகும். இந்த தேர்தலை மொத்தம் 208 பேர் எதிர்கொண்டனர். இவர்களில் 16 பேர் பெண்கள். சட்டசபை சபாநாயர் சசாங்க் சேகர் போக்தா, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் லாபின் ஹேம்ப்ரான், ஹேமந்த் சோரனின் உறவினர் சிதா முர்மு உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்கள் ஆவர். தேர்தல் நடைபெற்ற பகுதிகளான தும்கா, பகுர் ஆகியவைகளில் மாவேயிஸ்ட்டுகள் செல்வாக்கு அதிகமுள்ள இடங்கள். இந்த இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இரு மாநிலங்களில் 5 கட்டமாக பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 23-ந் தேதி எண்ணப்படுகின்றன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து